சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடில் சில்லரை வர்த்தகத்திற்கு தடை விதிப்பது குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.சென்னை, கோயம்பேடில், காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகை பொருட்கள் விற்பனைக்கு தனித்தனியாக மார்க்கெட் இயங்கி வருகிறது. நுாற்றுக்கணக்கான வியாபாரிகள், ஆயிரக்கணக்கான கூலித்தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள், மார்க்கெட்டை நம்பி உள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், இங்கு வந்து மொத்தமாக பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, சென்னையின் பல்வேறு இடங்களில் வசிக்கும் பொதுமக்களும், இங்கு நேரடியாக வந்து, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி செல்கின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக, 2020 மே, 5ம் தேதி மார்க்கெட் மூடப்பட்டது.ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, 2020 செப்., 28ம் தேதி முதல், மார்க்கெட் படிப்படியாக திறக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகே, சில்லரை வர்த்தகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவல் மீண்டும் சென்னையில் அதிகரித்து வருகிறது. பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டாலும், கோயம்பேடில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.இதே நிலை தொடர்ந்தால், மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு, கோயம்பேடு மார்க்கெட் காரணமாக மாறிவிடும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அஞ்சுகின்றனர். எனவே, மார்க்கெட்டில் ஐந்து கிலோவிற்கு குறைவாக பொருட்களை வாங்கும் சில்லரை வர்த்தகத்தை மட்டும் தடை செய்வது குறித்த ஆலோசனையில், அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.இது குறித்து வியாபாரிகளிடம் பேசி, விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE