சென்னை: சென்னையில், தேர்தலுக்கு பின், சுற்றுலா தலங்கள், மார்க்கெட் பகுதிகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தமிழகத்தில், குறைந்து வந்த கொரோனா தொற்று, இந்தாண்டு மார்ச் முதல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.'தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேர்தலுக்கு பின், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும். கசப்பான அனுபவங்களுக்கு தயராகுங்கள்' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் எச்சரித்திருந்தார்.இந்நிலையில், தேர்தலுக்கு பின், என்னென்ன கட்டுப்பாடுகள் கொண்டு வரலாம் என, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கமிஷனர் பிரகாஷ் தலைமையில் நடந்த ஆலோசனையில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில், மெரினா, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களில், முதலில் நேர கட்டுப்பாடு, தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், முற்றிலும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படும். வழிப்பாட்டு தலங்களில், நிகழ்ச்சி நடத்த தடை விதிக்கப்படும். திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சம், 50 பேர்; துக்க நிகழ்ச்சிகளில், அதற்கும் குறைவானர்கள் பங்கேற்க மட்டுமே அனுமதிக்கப்படும்.
கோயம்பேடு உள்ளிட்ட மொத்த சந்தையில், சில்லரை வணிகத்திற்கு தடை விதிக்கப்படும். அதற்கு மாற்றாக, திறந்த வெளிகளில் காய்கறி சந்தை அமைக்க அனுமதிக்கப்படும். பொருளாதார சூழல் காரணமாக, திரையரங்குகளில் குறிப்பிட்ட காட்சிகள் ரத்து செய்யப்படும்; வணிக வளாகங்களின் நேரம் குறைக்கப்படும். தொடர்ந்து தொற்று அதிகரிக்கும் பட்சத்தில், முழுவதுமாக மூடப்படும்.சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிட இடமில்லாத உணவகங்களில், பார்சலுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். சாலையோர உணவகங்கள் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.ஐ.டி., நிறுவன ஊழியர்கள், 10 சதவீதம் பேர் அலுவலகத்திலும், மற்றவர்கள் வீட்டில் இருந்த படி பணியாற்ற வேண்டும். அத்தியாவசியமில்லாத பணியாளர்களுக்கு அனுமதி இல்லை. இதுபோன்ற கட்டுபாடுகளால், பொது போக்குவரத்தில் பயணியர் கூட்டம் குறையும். பஸ் மற்றும் ரயில்களில் அனைவரும் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநகராட்சி சுகாதாரம் மற்றும் களப்பணியாளர்கள், காவல்துறை மற்றும் பல்துறை பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த உள்ளனர். அதனால், முககவசம், சமூக இடைவெளியை கண்காணித்து, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுபோன்ற கட்டுப்பாடுகள் குறித்தும், தொற்றை தடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தேர்தலுக்கு பின், மற்றொரு கூட்டம் உள்ளது. அதில், சில கட்டுப்பாடுகள் தவிர்ப்பது அல்லது கூடுதல் கட்டுபாடுகள் குறித்து மீண்டும் ஆலோசிக்கப்படலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE