ட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் :

50 லட்சம் பேருக்கு வேலை
* தமிழ், ஆங்கிலத்தோடு, மொழி வழி சிறுபான்மையினர், தங்கள் தாய்மொழி பயில ஏற்பாடுசெய்யப்படும்.
* குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு, அரசு வேலையில் முன்னுரிமை அளிப்போம். பெண்கள் வேலை பெற உதவும் வகையில், மாவட்டம் தோறும் பயிற்சி நிலையங்களை உருவாக்குவோம். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம்.
*ஐந்து ஆண்டுகளில், 50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்க, மாநில திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பை ஏற்படுத்துவோம்.
*இயற்கை வளங்களை பாதுகாக்க, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 75 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில், 30 ஆயிரம் இடங்கள், பெண்களுக்கு ஒதுக்குவோம்.
* மேலும், 75 ஆயிரம் சாலைப் ளர்கள்; 25 ஆயிரம் திருக்கோவில் பணியாளர்களையும்நியமிப்போம். மக்கள் நலப் பணியாளர்களாக, 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர்.
தமிழருக்கே வேலை
*தொழில் துறையில், கடனுதவி வழங்க, 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குவோம். தமிழக தொழில் நிறுவனங்களில், 75 சதவீதம் வேலை வாய்ப்புகளை, தமிழர்களுக்கே வழங்க, சட்டம் இயற்றுவோம்.
* வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், 15 பேரை கொண்டு, 'இளைஞர் சுய முன்னேற்ற குழுக்கள்' அமைக்கப்படும். அவர்கள் தொழில் துவங்க, 25 சதவீதம் மானியம் வழங்குவோம்.
மாத மின் கட்டணம்
* மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் திட்டம் வரும். உடன்குடி, செய்யூர் மின் திட்டங்களை செயல்படுத்துவோம். ரேஷன் கடைகள் அனைத்தும், ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும். விண்ணப்பித்த, 15 நாட்களில், ரேஷன் அட்டை வழங்குவோம். அரிசி தவிர மற்ற பொருட்களை, பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்வோம்.
*ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், மானிய விலையில், மூன்று எல்.இ.டி., பல்புகள் வழங்கப்படும். மாதம்தோறும், 1 கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். உளுந்தம் பருப்பு மீண்டும் தருவோம்.
முதியோர் வார்டுகள்
*சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை, அரசு பணியாளர்களாக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்குவோம்.
*கோவில் பணியாளர் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கவும், பொங்கல் போனஸ் வழங்கவும், ஆய்வு செய்வோம்.
*திருநங்கையர் ஓய்வூதியம், 1,500 ரூபாயாக உயர்த்துவோம். அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் வீடுகள் ஒதுக்கப்படும்.
*முதியோர் ஓய்வூதிய தொகையை, 1,000 ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்துவோம். மாவட்ட தலைநகரங்களில், முதியோர் இல்லங்கள் அமைப்போம்.
பிரசவ விடுமுறை
* அரசு பணிக்கு செல்லும் பெண்களுக்கு, ஒன்பது மாத பேறுகால விடுமுறை, 12 மாதங்களாக உயர்த்தப்படும். கைம்பெண் மகளிர் நல வாரியம் அமைப்போம். அரசு வேலைவாய்ப்புகளில், பெண்களுக்கு, 30 சதவீத இட ஒதுக்கீட்டை, 40 சதவீதமாக உயர்த்துவோம். கர்ப்பிணியர் உதவித்தொகை, 18 ஆயிரம் ரூபாயில் இருந்து, 24 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவோம்.
*பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள், மாவட்டம்தோறும் ஏற்படுத்துவோம். ஒரு லட்சம் கிராமப்புற பெண்களுக்கு, சிறு தொழில் துவங்க, 50 ஆயிரம் ரூபாய், வட்டியில்லா கடனாக வழங்குவோம். திருமணமாகாத, ஆதரவற்ற மகளிருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப, அரசு வேலை தரப்படும்.
தனியார் துறையிலும் ஒதுக்கீடு
*தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்துவோம். துாய்மைப் பணியாளர்களுக்கு, வாரம் ஒரு நாள் விடுமுறை உண்டு. அன்று பணிபுரிய நேரிட்டால், கூடுதல் ஊதியம் வழங்கப்படும். பணியின்போது இறக்க நேரிட்டால், வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும், அரசு சாதாரண பஸ்களில், இலவச பயணச் சலுகை வழங்குவோம். மாற்றுத் திறனாளிகளுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்.
பள்ளி குழந்தைகளுக்கு பால்
* கிராம நத்தத்தில் நீண்ட காலமாக உள்ள வீடுகளுக்கு, அடிமனை பட்டாக்கள் வழங்கப்படும். நகரங்களில், ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு, மனைப் பட்டா வழங்க ஏற்பாடு செய்வோம்.
* பள்ளி குழந்தைகளுக்கு காலையில், பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால், பால் உற்பத்தியாளர்கள், முழுமையாக ஆவின் நிறுவனத்திடமே பால் விற்பனை செய்யும் வாய்ப்பு உருவாக்கப்படும்.
உணவுக்கூடை திட்டம்
* குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க, குழந்தைகள் நல பாதுகாப்பு திட்டம்; ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள் கொண்ட, உணவுக்கூடை திட்டம் செயல்படுத்தப்படும். ஏழை மக்களுக்கு, குறைந்த விலையில் உணவு வழங்க, முதல் கட்டமாக, 500 இடங்களில், 'கலைஞர் உணவகம்' அமைப்போம். இரவு நேர காப்பிடங்களும் அமைக்கப்படும்.

கொரோனா இழப்பீடு
*கொரோனாவால் இறந்த மருத்துவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு, உரிய இழப்பீடு வழங்குவோம். கோவை, நெல்லை, திருச்சி, கிருஷ்ணகிரியில், புதிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் கட்டப்படும். ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது, ஆறு ஆம்புலன்ஸ்வாகனங்கள் செயல்படும்.
*சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தனிப்பிரிவு துவங்குவோம். மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், இதய அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும்.
*ஒப்பந்த முறையில் பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் நிரந்தரம் செய்யப்படுவர். நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைநகரங்களில், பல்நோக்கு மருத்துவமனைகள் அமைக்கப்படும்.
ஆட்டோ நகர்
*சென்னை போன்ற பெருநகரங்களில், நவீன அடுக்குமாடி கார் நிறுத்தும் வசதிகள் செய்து தரப்படும். பெருந்துறை, சேலம், சங்ககிரி, திருச்சி, திருச்செங்கோடு போன்ற முக்கிய நகரங்களில், ஆட்டோ நகர் அமைப்போம்.
*லாரிகள் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், விபத்துகள் நடக்கின்றன. இதை தவிர்க்க, புதிய குழாய்கள் அமைத்து, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்வோம். அனைத்து கடலோர மாவட்டங்களிலும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்விரிவுபடுத்தப்படும்.
*பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் விண்ணப்பித்த, 15 நாட்களில், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவோம்.
*ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், தமிழகத்தை, நான்கு பகுதிகளாக பிரித்து, ஒலிம்பிக் அகாடமிகள் அமைப்போம். l விளையாட்டு வீரர்களுக்கு, சிறப்பு உயர்நிலை பயிற்சி, ஊக்கத்தொகை, போட்டிகளுக்கு சென்று வர பயண செலவு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்து தருவோம்.
*சென்னையில் பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைத்து, அனைத்து வகை போட்டிகளுக்கும் உயர்தர பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு செய்வோம்.l அரசு வேலைவாய்ப்பில் வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்துவதுடன், அதில், சிலம்பமும் சேர்க்கப்படும்.
* ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக, மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும். மீண்டும் சட்ட மேல்சபை கொண்டு வர, உரிய அரசியல் சட்ட திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.
*சட்டசபை நிகழ்ச்சிகள், 'டிவி'க்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 'கான்கிரீட்' வீடுக்கு மானியம்
*கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை புதுப்பித்து, கிராமங்களில், 'கான்கிரீட்' வீடு கட்டுவதற்கான மானிய தொகை, ஒரு வீட்டுக்கு, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவோம். அத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களுக்கும், கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்.
*சமத்துவபுரங்கள் சீர் செய்யப்பட்டு, அவை உருவானதன் நோக்கம் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுப்போம். புதிய சமத்துவபுரங்கள் அமைப்போம்.
தீர்வுக்கு தனி துறை
* 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில், மக்களின் அன்றாட பிரச்னை குறித்த மனுக்களை பெற்று, ஆட்சிக்கு வந்த, 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என, ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கென, ஒரு தனி துறை, முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உருவாக்கப்படும்.
*மனுக்களை ஆய்வு செய்ய, தொகுதி அளவில், ஊராட்சி அளவில் முகாம்கள் அமைத்து, நேரடி விசாரணை நடத்தி, நிறைவேற்றி தரப்படும்.
*அனைத்து தொகுதிகளிலும், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் குறை கேட்கும் முகாம்கள் நடத்துவோம். ஆட்சி நிர்வாகம் சிறந்த முறையில் செயல்படும் வகையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் சீரமைப்பு செய்வோம்.
போலீசுக்கு வார 'லீவு'
*அனைத்து போலீசாருக்கும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்குவோம். போலீசாருக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதுடன், இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்கப்படும். உயிர் நீத்தவர்கள் குடும்பத்துக்கு, 1 கோடி ரூபாய் ஆறுதல் தொகை வழங்குவோம்.
*போலீஸ் கமிஷன் அமைக்கப்பட்டு, ஒரு கால வரையறைக்குள், அதன் பரிந்துரைகளை அமல்படுத்துவோம்.
*போலீசார் குறைகளை சரிசெய்வதற்காக, மாநில மற்றும் மாவட்ட அளவில், குறைதீர்க்கும் அமைப்பை ஏற்படுத்துவோம். துறை ரீதியான சிறு தண்டனைகள் ரத்து செய்யப்படுவதுடன், உரிய காலத்தில் பதவி உயர்வு பெறவும் வழிவகுக்கப்படும். மருத்துவப்படி, இடர்கால படியையும் உயர்த்துவோம்.
*இரண்டாம் நிலை போலீஸாக பணியில் சேருபவர்களும், ஏழு ஆண்டுகள் முதல்நிலை போலீஸாக பணிபுரிந்தவர்களும், 10 ஆண்டுகளில் ஏட்டாகவும், 20 ஆண்டுகளில், எஸ்.எஸ்.ஐ., ஆகவும் பதவி உயர்வு வழங்குவோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE