அ.தி.மு.க., வாக்குறுதிகள் என்ன?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., வாக்குறுதிகள் என்ன?

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (24)
Share
சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:வியாபாரிகளுக்கு பாதுகாப்பு * அனைத்து வியாபாரிகளையும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து, அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுப்போம் வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல், வியாபாரம் செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள்

சட்டசபை தேர்தலுக்காக, அ.தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:latest tamil news

வியாபாரிகளுக்கு பாதுகாப்பு


* அனைத்து வியாபாரிகளையும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து, அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுப்போம் வியாபாரிகள் எவ்வித இடையூறுகளுக்கும் ஆளாகாமல், வியாபாரம் செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


அரசு பணியில் பெண்களுக்கு 40%


*அரசு பணிகளிலும், உள்ளாட்சி அமைப்பு பணிகளுக்கும், டி.என்.பி.எஸ்.சி., - டி.ஆர்.பி., - எம்.ஆர்.பி., ஆகிய பொது போட்டி தேர்வு வாயிலாக, தகுதியின் அடிப்படையில், பாரபட்சமின்றி, படித்த இளைஞர்கள் பணியமர்த்தும் செயல்முறை தொடரும்

* அரசு வேலைவாய்ப்பில், பெண்களுக்கான ஒதுக்கீடு, 40 சதவீதமாக உயர்த்தப்படும்
*படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கான வாழ்வாதார ஊக்கத்தொகை, இரட்டிப்பாக உயர்த்தி வழங்கப்படும்.
* அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள், அமைப்பாளர்களின் கல்வித் தகுதிக்கேற்ப, அரசு பணிகளில் முன்னுரிமை வழங்குவோம்.


அம்மா இல்லம் திட்டம்*சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, 'அம்மா இல்லம் திட்டம்' வாயிலாக, அரசால் இடம் வாங்கப்பட்டு, கிராமப்புறங்களில் கான்கிரீட் வீடுகள்; நகர பகுதிகளில், அடுக்குமாடி வீடுகள் கட்டி, விலையில்லாமல் வழங்குவோம்.


30 நாளில் தொழில் அனுமதி


*இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், புதிய தொழில்கள் துவங்க, குறைந்த வட்டியில் மானியத்துடன், 'மென்கடன்' வழங்கும் திட்டம் துவங்கப்படும்.

*தொழில் துவங்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு, 30 நாளில் அனுமதி ஆணை வழங்கப்படும்
தனியார் துறை தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பில், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

*ஒவ்வொரு மாவட்டத்திலும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்குவோம்.


ஆசிரியர் சம்பளம் அரசு நிர்ணயம்


* அங்கீகாரம் பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்தோர், அரசு ஆசிரியர் பள்ளிகளில் மீண்டும் பயிற்சி பெற்று, தேர்ச்சி பெற்றவர்களில் விடுபட்டோருக்கு, ஆசிரியர் பணி வழங்க
பரிசீலிக்கப்படும்.

*தனியார் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்கு கட்டணத்தை, அரசு நிர்ணயம் செய்வது போல,
அப்பள்ளிகளில் பணி செய்யும் . ஆசிரியர்களுக்கான ஊதிய தொகை யை, அரசே நிர்ணயம்
செய்யும்.


2022ல் முதலீட்டாளர் மாநாடு


*அனைத்து அமைப்பு சாரா வாகன ஓட்டுனர்களுக்கும், விலையில்லா விபத்து காப்பீட்டு திட்டம் துவங்கப்படும். சென்னை புறநகர் பகுதியில், அதிநவீன, 'ஒருங்கிணைந்த மோட்டார் வாகன வணிக வளாகம்' ஏற்படுத்தப்படும்.

*புதிய, 'சிப்காட்' தொழிற்பேட்டை நிறுவப்படும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு, தற்போது இருக்கும், 200 குதிரை மின்சக்தி திறன், 250 குதிரை மின்சக்தி திறனாக உயர்த்தப்படும்.
மூன்றாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு, 2022ல் நடத்தப்படும்.சென்னையில் மருந்து பூங்கா அமைக்க நடவடிக்கை எடுப்போம். தமிழகத்தில் ராணுவ தளவாடங்கள் பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுப்போம்.


பொது போக்குவரத்து

*சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத, பொது போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் வாயிலாக, 5,000 மின்சார பஸ்களும், அரசுக்கு சொந்தமான, 5,000 மினி பஸ்களும், மாநில பொது போக்குவரத்துடன் இணைக்கப்படும்.


ஆபரண தொழில் வாரியம்

*உப்பள தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணம், 5,000 ரூபாய் வழங்கப்படும். வெள்ளி கொலுசு உட்பட பல்வகை ஆபரணங்கள் மற்றும் அணிகலன் செய்யும் பொற்கொல்லர்கள் நலன் காக்க, 'வெள்ளி கொலுசு ஆபரண தொழில் நல வாரியம்' அமைப்போம்.


மாதம், ரூ.1,500 உதவி


*சமூகத்தில் பொருளாதார சமநிலை யை உருவாக்க, குலவிளக்கு திட்டத்தின் கீழ், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், மாதம்தோறும், 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்குவோம். இந்த தொகை குடும்ப தலைவியின் வங்கி கணக்கிலும், ஆண்கள் மட்டுமே உள்ள குடும்பத்தில், அவரது வங்கி கணக்கிலும் செலுத்துவோம்

*நகர பஸ்களில் பயணம் செய்யும் மகளிருக்கு, கட்டணத்தில், 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்

* தமிழகம் அமைதி பூங்காவாக தொடர்ந்து திகழும் வகையில், சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு, மக்கள் அச்சமின்றி வாழும் சூழலை பேணிகாப்போம்.


கோவை, மதுரையில் மெட்ரோ

*மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக்கால நிவாரணம், 5,000 ரூபாய் வழங்கப்படும். அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச்சாலைகள் அமைக்கப்படும். கோவை, மதுரையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம். சென்னை விமான நிலையம் முதல், கிளாம்பாக்கம் வரை, மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்.


நாகையில் துறைமுகம்

*பன்னாட்டு கடல் வணிகத்தில் சிறந்திருந்த, சோழ நாட்டு துறைமுகமான நாகையில் இருந்து, சிங்கப்பூர், மலேஷியாவுக்கு பயணியர் மற்றும் சரக்கு கப்பல் இயங்கி வந்தது. 1984க்கு பின், பயணியர் சேவை நிறுத்தப்பட்டது.

*மீண்டும், அத்துறைமுகத்தை மேம்படுத்தி, கப்பல் போக்குவரத்தை தொடங்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்.


வற்றாத காவிரி நதி

*கோதாவரி - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து, காவிரியை வற்றாத நதியாக மாற்றுவோம்.

*வீணாக கடலில் கலக்கும் நீரைத் தடுத்து, நீர்ப் பாசன வசதிகளையும், குடிநீர் ஆதாரத்தையும் பெருக்க, தேவையான இடங்களில் அணைக்கட்டுகள் கட்டுவோம்.

*நதி, ஆறு, ஓடைகளில் தடுப்பணைகள் அமைத்து, நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.
*சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படும். தாமிரபரணி ஆற்றின் உபரி நீரை, துாத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில், வறண்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்று, பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*தாமிரபரணி -- வைப்பாறு இணைப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வரும். கோவில் குளங்கள் புனரமைக்கப்படும். கோவில்களில் புராதன தன்மை திரும்ப கொண்டு
வரப்படும்.
*அனைத்து ஆறுகளும் இணைக்கப்பட்டு, 5 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள், பாசன வசதி பெற வழிவகை செய்வோம்.


நீர் மிகை மாநிலம்

*ஜெ., செயல்படுத்திய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை, மக்கள் இயக்கமாக்கி, நீர் மிகை மாநிலமாக்குவோம்.

*பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்புகள், 42 லட்சம் வீடுகளுக்கு உள்ளன. மீதமுள்ள வீடுகளுக்கும், 2025ம் ஆண்டுக்குள் குழாய் வழியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வோம்.

*தேவைப்படும் இடங்களில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.


கடல் சுற்றுலா பூங்கா


*சென்னை, ராமேஸ்வரம்,- தனுஷ்கோடி ஆகிய இடங்களில், உலகத்தரமான கடல் சுற்றுலா பூங்கா அமைப்போம். சென்னையில், உச்ச நீதிமன்ற கிளையை நிறுவ, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.
*வழக்கறிஞர்களின் நலன் மற்றும் அவர்களின் குடும்ப பாதுகாப்பை கருதி, 7 லட்சம் ரூபாய் சேமநல நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவோம்.சூரிய ஒளி மின்சார மானியம்
*சிறு, குறு தொழிற்சாலைகளின் மின் தேவைகளுக்கு சூரிய ஒளி மின்சாரத்தை, தாங்களே தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்க, கூடுதல் மானியம் வழங்கப்படும்.


latest tamil news
* சென்னை உள்ளிட்ட முக்கிய மாநகரப் பகுதிகளில், பன்னடுக்கு வாகன நிறுத்த வளாகங்கள் கூடுதலாக அமைப்போம். 60 வயது கடந்த, நலிந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவோம். நிகழ்ச்சிகள் இல்லாத காலங்களில், 5,000 ரூபாய் ஆண்டு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

* பத்திரிகையாளர் குடும்ப நிவாரண நிதியும், ஓய்வூதியமும் உயர்த்தப்படும். முக்கிய நகரங்களில், பத்திரிகையாளர்களுக்கு வீடு கட்டிக் கொள்ள, குடியிருப்பு மனைகள் வழங்கப்படும்.


வயது வரம்பு நீட்டிப்பு


*அரசு ஊழியர் குடும்ப நல நிதி, 3 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 'சி' மற்றும் 'டி' பிரிவினருக்கு, வட்டி மானியத்துடன் குறுகிய கால கடன்கள் வழங்கப்படும். இதன்படி, 2 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படும்.

* அரசுப் பணியில் சேரும் வயது வரம்பு, இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்படும்.
*போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்படுவர். போலீசாருக்கு சுழற்சி அடிப்படையில், வார விடுப்பு வழங்கப்படும்.

*குறிப்பிட்ட கால இடைவெளியில், அனைத்து போலீசாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படும். 20 ஆண்டு காலம் போலீசாக பணியாற்றியோர், எஸ்.எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெறுவர். 25 ஆண்டான பின், எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெறுவர்.வீடு தேடி ரேஷன் பொருள் . பொதுவினியோக திட்டத்தின் வாயிலாக, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், மக்களின் வீடுகளுக்கே சென்று கொடுப்போம்

*அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, ஆண்டிற்கு ஆறு விலையில்லா சமையல் காஸ் சிலிண்டர்கள்; விலையில்லா சோலார் சமையல் அடுப்பு; விலையில்லா கேபிள் மின் இணைப்பு வழங்குவோம்

*பெண்களின் பணிச்சுமையை குறைக்க, அரிசி ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 'வாஷிங் மெஷின்' வழங்கப்படும். ஏழை ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இரு கொசு வலைகள் வழங்குவோம்.


நிதி தொழில்நுட்ப நகர்


*தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தேவையான நிதியை, பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறும் வகையில், மத்திய அரசை வலியுறுத்துவோம்.

*உள்நாட்டு, வெளிநாட்டு நிதி மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் சேவையை, தமிழகத்தில் இருந்து வழங்க, சென்னை, காவனுாரில், 260 ஏக்கர் பரப்பளவில், 'நிதி தொழில்நுட்ப நகர்' அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.


ஜாதிவாரி ஒதுக்கீடு


*ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில், அனைத்து ஜாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X