தேனி: அதிமுக, பா.ஜ., கூட்டணியில் யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம் என்றும், திமுக, காங்கிரசில் வாரிசுகள்தான் தலைவராக முடியும் எனவும் பா.ஜ., தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் பா.ஜ., ஆலோனைக் கூட்டம் நடந்தது. இதில், துணை முதல்வரும் போடி நாயக்கனூர் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு ஆதரவு கேட்டு பா.ஜ., தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி பேசியதாவது: அதிமுக அரசு, பொங்கல் பரிசாக ரூ.2,500 கொடுத்தது, பயிர்க் கடனை தள்ளுபடி செய்தது. இது போன்ற திட்டங்கள் மூலம் மக்களை நேசிக்கும் கூட்டணியாக அதிமுக - பா.ஜ., உள்ளது. நம் கூட்டணியில் உள்ள கட்சிகளில் யார் வேண்டுமானாலும் தலைவர்கள் ஆகலாம். ஆனால் திமுக, காங்கிரசில் வாரிசுகள்தான் தலைவராக முடியும்.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரி, 12 ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். திமுக - காங்கிரஸ்தான் ஜல்லிக்கட்டை தடை செய்தது. அவற்றை உடைத்து வீரவிளையாட்டை மீண்டும் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பன்னீர்செல்வம்தான். திமுக கூட்டணிக் கட்சியினர் முருகன் உட்பட பல்வேறு கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள். இதை உணர்ந்து செயல்படுங்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்தும், ஊழலும் அதிகரித்துவிடும். அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். திமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE