காரைக்குடி: தமிழகத்தில் பா.ஜ.,வின் கால் நகம் கூட பதியவிட மாட்டோம் என காங்., மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் வரவர தமிழக மக்கள் பா.ஜ.,வின் உண்மை மனநிலை, உண்மை முகத்தை அறிந்து கொள்வார்கள். தேர்தல் நேரத்தில் யார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தலாம் என்பது எல்லாம் பா.ஜ.,வுக்கு கை வந்த கலை. அதிமுக வேட்பாளர்களிடமும், அமைச்சர்களிடமும் வருமான வரி சோதனை நடத்த மாட்டார்கள்.

பெரும்பான்மை கிடைக்காமல் போனால் பா.ஜ., குறுக்கு வழியில் எம்.எல்.ஏ.,க்களை மிரட்டி ஆட்சி அமைக்க முயற்சிப்பார்கள். ஆனால் அதற்கு தமிழக மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள். தமிழகத்தில் அதற்கான வேலையும் இல்லை. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைதர தமிழக மக்கள் தயாராகி விட்டனர். தமிழகத்தில் பா.ஜ.,வின் கால் நகம் கூட பதியவிடமாட்டோம். இந்திய மக்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு. மக்கள் ஜனநாயகத்தை எப்போதும் காப்பாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE