கோவை: ''எனக்கு சில மிரட்டல்கள் வந்தன; அதற்கு நான் பயப்படமாட்டேன். எல்லாவற்றுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன்,'' என, ம.நீ.ம., தலைவர் கமல் கூறினார்.
கோவையில் தனியார் ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ம.நீ.ம., தலைவர் கமல் கூறியதாவது: வரலாறு என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. என்னை சினிமா நடிகர், மீண்டும் நடிக்க சென்று விடுவேன் என்கின்றனர். என் செலவுக்காக பிறரை சார்ந்திருக்ககூடாது. எம்.ஜி.ஆர்., எம்.எல்.ஏ.,வாக பல படங்கள் நடித்துள்ளார். அது பிறருக்கு கொடுப்பதற்கும், அரசியல் செய்வதற்கும் தேவையான பணமாக அவருக்கு இருந்தது. அதே தேவைக்காக, எனக்கும் அந்த பணம் தேவைப்படுகிறது. இது மக்களுக்கு நான் செய்யும் கடமையாகவே நினைக்கிறேன்.
நான் செய்த செலவுகள் எல்லாம் நான் சம்பாதித்ததுதான். அதற்கான கணக்கு என்னிடம் இருக்கிறது. தேர்தல் அலுவலர்கள் சிலர் இந்தளவு நேர்மையான கட்சி இல்லை என்று என்னை பாராட்டியிருக்கிறார்கள். இதே நேர்மையை ஆட்சிக்கு வந்தாலும் கொடுக்கும் தைரியம் இருக்கிறது. சில மிரட்டல்கள் எனக்கு வந்தன; அதற்கு நான் பயப்படமாட்டேன். எல்லாவற்றுக்கும் நான் தயாராகவே இருக்கிறேன். என் எஞ்சிய வாழ்நாள் மக்களுக்காக என முடிவுசெய்துவிட்டேன். என் அரசியலுக்கு சினிமா இடையூராக இருக்கும்பட்சத்தில் அது நிறுத்தப்படும்.

என் தொகுதியில் வாழும் ஏழை மக்களை சந்தித்தபோது, அவர்கள் வெகு ஜாக்கிரதையாக பாதுகாக்கப்பட்ட ஒரு குப்பத்தில் வாழ்கின்றனர். தொடர்ச்சியாக இரு அரசுகளும் அவர்களை ஏழ்மையாகவே வைத்திருக்கின்றன. ஏழ்மையில் இருந்து அவர்கள் அகல, அனைவருக்கும் செழுமை என்ற இலக்கை நோக்கி மட்டுமே ம.நீ.ம., நகர்ந்துகொண்டிருக்கிறது. என்னை பொறுத்தவரை வைத்த இலக்கை தாண்டி, சொன்னவற்றை செய்துமுடிக்கும்போது மட்டுமே வெற்றி அடைந்ததாக நினைக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.
கமலிடம் தீர்வு!
முன்னதாக, கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த நடிகை சுகாசினி கூறுகையில்,''நான் எதிர்பார்த்த கோவை இல்லை. அரசியல் சாக்கடை என நினைத்து ஒதுங்கியதால் தற்போது சாக்கடை அதிகரித்துகொண்டே செல்கிறது. இங்கு பல வசதிகள் இருந்தாலும், சேரிகள் இருக்கும் இடத்தில் அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை. தீர்க்கமுடியாத பிரச்னைகளுக்குகூட உடனடி தீர்வு தரும் தைரியத்தை கமலிடம் பார்க்கமுடிகிறது,'' என்றார்.
சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணைப் பொது செயலாளர் ராதிகா உடனிருந்தார்.
கமல் மீது வழக்குப்பதிவு
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோவை தெற்கு தொகுதியில் கமலுக்கு ஆதரவாக பிரசாரம் நடந்தது. பிரசார வாகனத்தில் கடவுள் வேடமிட்ட நபர்கள் டார்ச்லைட் சின்னத்திற்கு ஓட்டுப்போடுமாறு பொது மக்களிடம் பிரசாரம் செய்தனர். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என காட்டூர் போலீஸ் நிலையத்தில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் கமல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.