சென்னை: இன்னும் இரண்டே நாட்களில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்னதாக திமுக ஆட்சியின் போது நடைபெற்ற அவலங்களை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் #திமுக_கேடு_தரும், #DMKLosingTN போன்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்டானது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஏப்.,6) சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில், அதிமுக கூட்டணி, திமுக கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்காக இரு கூட்டணி கட்சிகளும் அவர்களின் ஆட்சியில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக.,வினர், அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாகவும், நீட், இந்தி திணிப்பு மூலம் தமிழர்களின் உரிமைகள் பறிப்போவதாகவும் பிரசாரம் செய்கின்றனர். மாறாக அதிமுகவினர், 10 ஆண்டுகளுக்கு முன்பாக திமுக ஆட்சியின்போது இருந்த மின்தடை, நிலஅபகரிப்பு. கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றை கூறி பிரசாரம் செய்கின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் இன்று (ஏப்.,4) தமிழகத்தில் வெளியாகும் அனைத்து முன்னணி செய்தித்தாள்களிலும் 4 பக்கங்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதில், நில அபகரிப்பு, திமுக.,வினரின் ரவுடிசம், மின்வெட்டு, மீத்தேன் ஆய்வுக்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம், 2ஜி ஊழல், இலங்கை தமிழர் பிரச்னை, குவாரி மோசடி, பஞ்சமி நில விவகாரம் போன்ற செய்திகளை வெளியிட்டுள்ளனர். இந்த செய்திகளை நெட்டிசன்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் #திமுக_கேடு_தரும், #DMKLosingTN பகிர்ந்து திமுக ஆட்சிக்கு வந்தால், இதெல்லாம் மீண்டும் நடைபெறும் என எச்சரிக்கை விடுப்பதோடு, மக்கள் சிந்தித்து ஓட்டளிக்குமாறும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், இந்த ஹேஸ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டானது.
மேற்கூறிய ஹேஸ்டேக்குகளில் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள சில கருத்துகள்...
* 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவ்வளவு அவல செயல்களை செய்துள்ள திமுக, இப்போது ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்யுமோ
* திமுக.,வினர் தொடர்ந்து வன்மத்தை கக்கும் வகையில் பிரசாரம் செய்கின்றனர். அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்
* தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளில் இப்படியொரு விளம்பரத்தை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிமுக.,விற்கு நன்றி
* ஊடகங்கள் வெளியிடும் செய்திகளையே விளம்பரமாக மாற்றி அதன் மூலம் பிரசாரத்தை செய்துள்ள அதிமுக.,வின் வியூகம் வரவேற்க வேண்டியதுதான்
* இவ்வளவு கொடுமைகள் நடந்தும் 10 ஆண்டுகளாக மக்களை அதிமுக ஆட்சி தான் காப்பாற்றியுள்ளது. திமுக.,வினருக்கு இந்த தேர்தலில் மக்கள் கொடுக்கப்போகும் தீர்ப்பு, இனி அக்கட்சியே இல்லாத வகையில் இருக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE