வயநாடு:''கேரளாவில், ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், 'நியாய்' திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்கள் அனைவருக்கும், மாதம், 6,000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் உறுதி அளித்தார்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தல், ஒரே கட்டமாக நாளை நடக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், வயநாட்டின் மனந்தவாடியில் உள்ள வெள்ளமுண்டா என்ற இடத்தில், நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், வயநாடு தொகுதியின் காங்., - எம்.பி., ராகுல் பேசியதாவது: கேரளாவைச் சேர்ந்த ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்குகளில் மாதம் தோறும், நேரடியாக பணம் செலுத்துவதே, 'நியாய்' திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும், மாதம், 6,000 ரூபாய் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக, வயநாட்டின் திருநெல்லியில் உள்ள பிரசித்தி பெற்ற மஹா விஷ்ணு கோவிலில், ராகுல், சுவாமி தரிசனம் செய்தார்.
தேர்தல் கமிஷனுக்கு கடும் கண்டனம்
அசாமில், கடந்த, 1ம் தேதி இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு முடிவடைந்த பின், பா.ஜ., வேட்பாளரின் வாகனத்தில், நான்கு மின்னணு ஓட்டு இயந்திரங்கள் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நான்கு அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ரடாபாரி சட்டசபை தொகுதியில், ஒரு ஓட்டு சாவடியில் மறு ஓட்டுப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, 'அசாமின் போடோலாந்து மக்கள் முன்னணியின் தலைவர் ஹக்ரமா மொயிலாரியை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் வாயிலாக கைது செய்வோம்' என, பா.ஜ., அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா மிரட்டியதாக குற்றம்சாட்டப் பட்டது.இதையடுத்து பிஸ்வ சர்மா பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட, 48 மணி நேரம் தடையை, 24 மணி நேரமாக தேர்தல் கமிஷன் குறைத்தது.
இந்த இரு சம்பவங்ளின் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படு வதாக ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தன், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில், 'தேர்தல் - கமிஷன்' என்ற இரு வார்த்தைகள் வாயிலாக, தன் கடுமையான விமர்சனத்தை அவர் பதிவு செய்தார்.