ஹிந்துக்களை அவமதித்த தி.மு.க.,வுக்கு பதிலடி கிடைக்கும் : எழுத்தாளர் பிரபாகரன் ஆவேசம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஹிந்துக்களை அவமதித்த தி.மு.க.,வுக்கு பதிலடி கிடைக்கும் : எழுத்தாளர் பிரபாகரன் ஆவேசம்

Added : ஏப் 04, 2021
Share
சென்னை:''எப்போதும் ஹிந்துக்களை அவமதிப்பதும், ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தி பேசுவதுமாக இருக்கும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு, மக்கள் தேர்தலில் தக்க பதிலடிகொடுப்பர்,'' என, எழுத்தாளர் பிரபாகரன் தெரிவித்தார். அவரது பேட்டி:சமூக நீதியை பாதுகாப்பது நாங்கள் தான் என, தி.மு.க., சொல்கிறதே?முதன்முதலில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு கொண்டு

சென்னை:''எப்போதும் ஹிந்துக்களை அவமதிப்பதும், ஹிந்து கடவுள்களை அசிங்கப்படுத்தி பேசுவதுமாக இருக்கும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு, மக்கள் தேர்தலில் தக்க பதிலடிகொடுப்பர்,'' என, எழுத்தாளர் பிரபாகரன் தெரிவித்தார்.

அவரது பேட்டி:


சமூக நீதியை பாதுகாப்பது நாங்கள் தான் என, தி.மு.க., சொல்கிறதே?

முதன்முதலில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு கொண்டு வந்தது மத்திய அரசு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதன் பின், எம்.ஜி.ஆர்., காலத்தில், 50 சதவீத ஒதுக்கீடும், ஜெயலலிதா காலத்தில், 69 சதவீத ஒதுக்கீடும் கொண்டு வரப்பட்டன. ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்ததற்காக, சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. தி.மு.க., காலத்தில் எதுவும் செய்யவில்லை.


இது ஈ.வெ.ரா., மண், இங்கு பா.ஜ., நுழைய முடியாது என தி.மு.க., சொல்கிறதே?

கடந்த, 1967ல் தி.மு.க., ஜெயித்தது. அதன்பின் அக்கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால், மக்கள் மாற்றத்தை விரும்பி, காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்டுக்கு ஓட்டு போட்டிருப்பர். பா.ஜ., அன்றைக்கு இல்லை.தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., பிரிந்து வந்தவுடன் மாற்றம் வந்தது. 'இதுவா... அதுவா...' என்பது போல மக்கள், தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி மாறி ஓட்டு போடுகின்றனர். இது ஒரு விதத்தில் பெண் எடுத்து, பெண் கொடுப்பது மாதிரி தான்.

தி.மு.க.,வினர் சொல்வதுபோல ஈ.வெ.ரா., மண்ணாக இருந்தால், கோவில்களில் செருப்பு கழற்றி போடக்கூட இடமில்லாத அளவுக்கு, ஏன் கூட்டம் கூடுகிறது? ராமனை செருப்பால் அடித்தால் ஓட்டு அதிகமாக இருக்கும் என்று, ஆறு மாதம் முன் சவால் விட்ட ஸ்டாலின், இப்போது ஏன், 1,000 கோடி ரூபாய், கோவில் புனரமைப்புக்கு ஒதுக்குவதாக வாக்குறுதி தருகிறார்? வேல் பிடிக்கிறார்; 'எங்கள் கட்சியிலும் ஹிந்துக்கள் உள்ளனர்' என, அறிக்கை விடுகிறார். இதையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


இது குறித்த பா.ஜ.,வின் பிரசாரம் எடுபடுமா?

பா.ஜ., பிரசாரம் செய்வது மட்டுமல்ல; நடுநிலையாளர்களுக்கும் இந்த உணர்வு இருக்கத் தானே செய்கிறது. அலை போல இல்லை. ஆனாலும் உள்ளே பாயும், 'கரன்ட்' போன்ற உணர்வு ஏற்பட்டு, ஹிந்து மக்கள் ஒரு புள்ளியில் இணைய தயாராக உள்ளனர். பிரதமர் மோடியின் தளம், பெரிய உந்து சக்தி. இதற்கு முன், பெரிய தலைமை கிடைக்கவில்லை. இப்போது மோடி, ஆரோக்கியமான அரசியல் பேசுகிறார்.

ஆறாண்டு காலத்தில் பாகுபாடில்லாமல் மோடி செய்த திட்டங்களை, மக்கள் பேசுகின்றனர். ஹிந்து கடவுள்களையும், பக்தர்களையும் அவமதித்த, தி.மு.க.,விற்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர்.கோவில் பணிகளுக்கு 1,000 கோடி ரூபாய் என்ற, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, தாக்கத்தை ஏற்படுத்தும் தானே!ஒரு மாற்றமும் வராது. திருமண வீட்டில் ஹிந்து திருமண மந்திரங்களைப் பற்றி பேசினால் உடல் நடுங்குகிறது என ஸ்டாலின் பேசியதை, மக்கள் மறக்கவில்லை.

யாரும் நம்ப மாட்டார்கள். அவரது அறிக்கையை, தண்ணீரில் எழுதி வைக்க வேண்டும். 50 ஆண்டுகளாக ராமனை கரித்து கொட்டியவர் கருணாநிதி. நான் அவரது பிள்ளை என்று அடிக்கடி சொல்லும் ஸ்டாலின், எப்படி 1,000 கோடி ரூபாய் கொடுப்பார்?


அ.தி.மு.க., மோசமாக ஆட்சி செய்கிறது, தி.மு.க., தான் மாற்று என்கிறாரே ஸ்டாலின்?

தி.மு.க., எந்த மாதிரியான பொற்காலத்தை தரப்போகிறது? '2ஜி' ஊழல் போன்றா, சாதிக் பாட்ஷா கொலை போன்றா... அண்ணா நகர் ரமேஷ் கொலை போன்றா... இவர்களது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.அரசியலில் மலினத்தை கொண்டு வந்தது, தி.மு.க., தான். ஜெயலலிதாவை சட்டசபையில் அவமானப்படுத்தியதை மறக்க முடியுமா!


மத்திய அரசின் மேல் மக்களுக்கு இருக்கும் கோபத்தை தி.மு.க., சாதகமாக பயன்படுத்துகிறதா?

கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், பலன் அடைந்தனர். 'நீட்' தேர்வால் கிராமப்புற மாணவர்களுக்கு பயன் இருக்குமென்று இந்த முறை மக்கள் புரிந்து கொண்டனர். கல்வியை வியாபாரமாக்கும் முதலைகளிடமிருந்து இளைஞர்கள் தப்பித்து விட்டதை புரிந்து கொண்டனர். இனிமேல், தி.மு.க.,வின் நீட் எதிர்ப்பு பிரசாரம் எடுபடாது.


ஆளும் அ.தி.மு.க.,வின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்க காரணம் உள்ளதா?

ஜாதி ரீதியாக, 10.5 உள் ஒதுக்கீடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அ.தி.மு.க., கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால், மாபெரும் வெற்றி பெற்றிருக்க முடியும்.


கருத்துக் கணிப்புகள் தி.மு.க.,வுக்கு ஆதரவாக வருகிறதே?

அது, அவர்களது கருத்துகளை திணிக்கும் ஒரு கருவி; அவ்வளவு தான்!பா.ஜ.,வுடன் கூட்டணி, அ.தி.மு.க.,வுக்கு பலமா, பலவீனமா?பலம் தான். பக்தர்களின் ஓட்டு பெரியளவில் கிடைக்கும். எல்லா வகையிலும் சாதகமாகத் தான் இருக்கும். 20 ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டுமா... உலகத் தரத்தை உயர்த்த முயற்சிக்கும் மோடியின் கைகோர்த்து, அனுமார் போல ஒரே தாவாக உயர வேண்டுமா... மக்களிடம் இந்த சித்தாந்தம் தான் தேர்தலில் எதிரொலிக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X