வடலுார், : 'உங்களின் ஒருவனாக என்றும் இருப்பேன். என்னை வெற்றி பெற செய்யுங்கள்' என, தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வம் உருக்கமாக பேசினார்.
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வம், கடந்த மாதம் 31ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவரது மகன் கதிரவன் தொகுதியில் தந்தைக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் பிரசார நிறைவு நாளான நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் வேட்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.வடலுார் நான்கு முனை சந்திப்பில் திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசுகையில், 'குறிஞ்சிப்பாடி தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்து மக்களுக்கான நிறைய நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன்.
விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க திட்டங்கள் கொண்டு வந்தேன். குண்டியமல்லுார் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வடலுார் சத்திய ஞான சபை சர்வதேச மையமாக தரம் உயர்த்தப்படும் என, கூறப்பட்டுள்ளது. அது கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் 10 ஆண்டுகளாக இருப்பவர்கள். கொள்கைக்கான கூட்டணி இது, ஆனால், எதிரில் உள்ளவர்கள் தேர்தலுக்காக சந்தர்ப்ப வாதத்துடன் கூட்டணி அமைத்துள்ளனர். எனவே, என்னை இத்தொகுதியில் பணியாற்ற மீண்டும் வாய்ப்பு கொடுங்கள். உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளித்து என்னை வெற்றி பெற செய்தால் உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றுவேன்' என, பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE