இடைப்பாடி:''பெண்களை இழிவுபடுத்தி பேசும் கட்சிக்கு, இப்படிப்பட்ட தண்டனை தான் கிடைக்கும் என, நினைக்கும்படி, தி.மு.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்,'' என, இறுதிக்கட்ட பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமி., பேசினார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடியில், நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில், அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மறைவுக்கு பின் நடக்கும் முதல் தேர்தல் இது. நான், இத்தொகுதியில், சட்டசபை தேர்தலில், ஏழாம் முறை, லோக்சபா தேர்தலில், மூன்று முறை என, 10 முறை போட்டியிட்டு உள்ளேன். இத்தொகுதியில், என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். முதல்வர் தொகுதி என்ற பெருமை உள்ளது. அந்த நிலை தொடர, அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்.
ஸ்டாலின், இத்தொகுதியில் நடந்து சென்றதாக சொன்னார். அவர் சந்தர்ப்பவாதி. தேர்தல்
வந்தால் தான் வருவார். நான், மாதந்தோறும் தவறாமல் தொகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன். ஒரு முதல்வர், சொந்த தொகுதிக்கு அடிக்கடி வருவது நானாகத் தான் இருப்பேன்.ஒரு எம்.எல்.ஏ., தொகுதிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை செய்து கொடுத்துள்ளேன்.
கனிமொழி, இங்குதான் பிரசாரத்தை துவங்கினார். உதயநிதியும் இங்கு பிரசாரம் செய்தார். என்
அரசியல் அனுபவம், அவர் வயது.
இத்தொகுதியில், என்னை,'டிபாசிட்' இழக்க செய்ய வேண்டும் என பேசியுள்ளீர். தி.மு.க., தான், இத்தொகுதியில் ஒருமுறை டிபாசிட்இழந்தது.எதைப் பற்றி பேசுகிறீர்கள் என, யோசித்து பேச வேண்டும். நீங்கள் முளைக்கிறபோதே, கருகித்தான் முளைக்கிறீர். அது முறையாக வளராது. அதனால் தான், உங்களுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.
எங்கள் கூட்டணி, பலம்பொருந்தியது.தொகுதியில், நான் வேட்பாளர் இல்லை. தொகுதி மக்கள் தான்வேட்பாளர்கள். நான் வேறு, அவர்கள் வேறு இல்லை. ஓட்டு எண்ணிக்கைக்கு பின்,
இத்தொகுதியில் உங்கள் கட்சி நிலை தெரிய வரும்.யார் மனதும் புண்படாமல், அரசியல் செய்ய வேண்டும். முதல்வரின் தாயை கொச்சைப்படுத்தி பேசிய, தி.மு.க.,வினரை பற்றி, உங்களுக்கு தெரியும். அரசியலுக்காக, நான் இதை கூறவில்லை. யார் தாயையும் கொச்சைப்படுத்தி பேசுபவர்கள், தி.மு.க.,வினர். இதைக்கூட கண்டிக்க தவறியவர் தான் ஸ்டாலின்.
அப்படி கண்டித்திருந்தால், அவர் உயர்ந்த மனிதராகி இருப்பார். தி.மு.க.,வின் போக்கே
இப்படித்தான். இவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்களை சுதந்திரமாக நடமாட விடமாட்டார்கள். அதனால், பெண்களை இழிவுபடுத்தி பேசும் கட்சிக்கு, இப்படிப்பட்ட தண்டனை தான் கிடைக்கும் என, நினைக்கும்படி, தி.மு.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.தொகுதிக்கு நான்
எதுவும் செய்ய வில்லை என, பொய் கூறி சென்று உள்ளார் ஸ்டாலின்.
நீங்களே சிந்தியுங்கள். தொகுதி, 2011க்கு முன் எப்படி இருந்தது, இப்போது எப்படி உள்ளது என, உங்களுக்கு தெரியும்.இரு பாலங்கள், புறவழிச்சாலை, கலை அறிவியல், கல்வியியல்
கல்லுாரிகள், பாலிடெக்னிக், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருத்துவமனைகள், தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டுள்ளன.தொகுதி முழுதும், தங்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கப்படுகிறது. நீங்கள் சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செய்து கொடுத்து உள்ளேன். இங்கு, செல்வகணபதி, தி.மு.க., மாவட்ட செயலராக உள்ளார்.
அ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்தபோது ஊழல் செய்தார் என, தி.மு.க., வழக்கு போட்டது. அவர், தி.மு.க.,வில் சேர்ந்தபின்,நிரபராதியாகி விட்டாராம். எனக்கு அரசியல் வாழ்வளித்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அவருக்கு, மெரினாவில் பீனிக்ஸ் பறவை வடிவில்
நினைவிடம் அமைத்துள்ளேன்.அவர் வாழ்ந்த வீட்டை,அரசுடைமையாக்கினேன். எம்.ஜி.ஆர் நினைவிடத்தை புதுப்பித்துள்ளேன். வாழ்வளித்த இரு தலைவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, வாசிங் மெஷின், சோலார் அடுப்பு, கூட்டுறவு
வங்கிகளில் வாங்கிய நகைக்கடன், சுயஉதவிக்குழு பெண்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.அதேபோல், இத்திட்டங்கள் தொடர்ந்து நடக்க, அ.தி.மு.க., அதன் கூட்டணி
கட்சிகளுக்கு ஓட்டு போட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE