ராய்ப்பூர்:சத்தீஸ்கரில், நக்சலைட்டுகளுடன் நடந்த சண்டையின்போது, காணாமல் போனதாக கருதப்பட்ட, 17 வீரர்கள் நேற்று சடலமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, இந்த சண்டையில் வீர மரணமடைந்த, பாதுகாப்புப் படையினர் எண்ணிக்கை, 22 ஆக அதிகரித்துள்ளது.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாஹெல் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள, 27 மாவட்டங்களில், 14 மாவட்டங்களில் நக்சலைட் பிரச்னை உள்ளது.
சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீசின் அதிரடிப் படை மற்றும் மாவட்ட ரிசர்வ் படையினர் இணைந்து, சத்தீஸ்கரின் பீஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.கடந்த, 2ம் தேதி இரவு, இந்த அதிரடி வேட்டை துவங்கியது. பல்வேறு குழுக்களாக பிரிந்து, வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, ஐந்து வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஒரு பெண் நக்சலைட்டும் கொல்லப்பட்டார். இந்த சண்டையின்போது, 18 வீரர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.நேற்று காலையும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது. அப்போது, துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில், 17 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து, சண்டையில் வீர மரணமடைந்த வீரர்கள் எண்ணிக்கை, 22 ஆக உயர்ந்துள்ளது. நக்சலைட் அமைப்பை சேர்ந்த, மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டையில், 30க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர். காணாமல் போன, மற்றொரு வீரரை தேடி வருகின்றனர்.
ஜனாதிபதி இரங்கல்
நக்சலைட்டுகளுடன் நடந்த மோதலில், 22 வீரர்கள் வீர மரணமடைந்ததற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்து உள்ளார்.பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.சட்டசபை தேர்தல் நடக்கும் அசாமில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதியிலேயே பயணத்தை முடித்து, டில்லி திரும்பியுள்ளார்.
ஆலோசனை
சத்தீஸ்கரில் உள்ள நிலைமை குறித்து, அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.நேற்று காலையில், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாஹெலை தொடர்பு கொண்டு, நிலைமை குறித்து விசாரித்தார்; அனைத்து உதவிகளும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக, அவர் உறுதி அளித்தார்.
மேலும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை தலைவர் குல்தீப் சிங்கை, உடனடியாக சம்பவ இடத்துக்குச் செல்லும்படியும், உள்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
பதிலடி கொடுப்போம்!
நம் வீரர்களை இழந்துள்ளோம்; இதை ஏற்க முடியாது. சரியான நேரத்தில், நக்சலைட் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியை கொடுப்போம்.
அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
400 நக்சலைட்டுகள்
இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்புப் படையினர் கூறியதாவது:சி.ஆர்.பி.எப்., உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, பாதுகாப்புப் படையினர், 1,500 பேர், இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். வனப் பகுதிக்குள் நுழைந்த பாதுகாப்புப் படையினர் மீது, பி.எல்.ஜி.ஏ., எனப்படும், மக்கள் விடுதலை கொரில்லா ராணுவம் என்ற நக்சலைட் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹிட்மா மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி சுஜாதா தலைமையில், 400 நக்சல்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.துப்பாக்கிச் சண்டையில், 12க்கும் மேற்பட்ட நக்சல்கள் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்களை, நக்சலைட்டுகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
பாதுகாப்புப் படையினர் பல பிரிவுகளாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மிகவும் கடுமையான நிலப்பரப்பு, அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததால், அந்தக் குறிப்பிட்ட வனப் பகுதிக்குள் நுழைந்த, குறைந்த அளவு பாதுகாப்புப் படையினரால், நக்சலைட்டுகள் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE