கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நாளை(6ம் தேதி) ஓட்டுப்பதிவையொட்டி, அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, சங்கராபுரம், ரிஷிந்தியம், கள்ளக்குறிச்சி(தனி) ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி தொகுதியில் 17 பேரும், சங்கராபுரத்தில் 19 பேர், ரிஷிவந்தியத்தில் 15 பேர், உளுந்துார்பேட்டையில் 15 பேர் என மாவட்டத்தில் மொத்தம் 66 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று இரவு 7 மணியுடன் பிரசாரம் முடிவடைந்தது.மாவட்ட நிர்வாகம் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகிவருகிறது.
100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு, தேர்தல் விதிமுறை மீறுவோர் மீதான நடவடிக்கை, தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஓட்டுசாவடி நிலைய அலுவலர் களுக்கு பயிற்சிகள், ஓட்டுசாவடிகளில் முன்னேற்பாடு பணிகள், மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர்கள் மற்றும் சின்னம் பொருத்துதல் போன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.நான்கு சட்டசபை தொகுதிகளிலும் 625 இடங்களில் மொத்தம் 1,569 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து கூடுதலாக 297 ஓட்டு சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளது. பதற்றமான ஓட்டுசாவடிகள் 56, மிகவும் பதற்றமான ஓட்டுசாவடிகள் 3 என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ஓட்டுசாவடியிலும் ஒரு தலைமை அலுவலர் கீழ் 4 அலுவலர்கள் வீதம் பணி அமர்த்தப்படவுள்ளனர். நாளை (6ம் தேதி) நடைபெறும் தேர்தலில், மாவட்டத்தில் 1,569 ஓட்டுசாவடிகளில் 6276 பேர் நியமிக்கப்படுவார்கள். அவசரகால தேவைக்கு 1,252 பேர் கூடுதலாக தயார் நிலையில் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், பாதுகாப்பான முறையில் ஓட்டுப்பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டு ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுசாவடிகளில் தெர்மல் ஸ்கேனர், சானிடைசர், முககவசம், பி.பி.இ., கிட், கையுறை போன்றவை பயன்படுத்தப்படவுள்ளன. எஸ்.பி.,ஜியாவுல்ஹக் மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார், ஆயுதப்படை போலீசார் என 4,000க்கும் மேற்பட்டோர் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். காவல் துறை பொது பார்வையாளர் அணுராதா சங்கர், காவல் துறையின் பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
அதேபால், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கிரண்குராலா தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கள்ளக்குறிச்சி ஸ்ரீகாந்த், உளுந்துார்பேட்டை சரவணன், ரிஷிவந்தியம் ராஜாமணி, சங்கராபுரம் ராஜவேல் ஆகியோர் வாக்குபதிவுக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்கின்றனர். பொதுபார்வையாளர்கள் சந்திரசேகர் வாலிம்பே, இந்து மல்ேஹாத்ரா ஆகியோர் தேர்தல் பணிகளை கண்காணித்து வருகின்றனர். அனைத்து ஓட்டுசாவடிகளிலும் வாக்காளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுசாவடி அலுவலர்கள், பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். மேலும், ஓட்டுச் சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பு வதற்கான வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது. எவ்வித அசம்பாவிதம் இன்றி நாளை ஓட்டுப்பதிவு அமைதியான முறையில் நடத்திட மாவட்ட நிர்வாகம் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE