அம்மான்: மேற்காசிய நாடான ஜோர்டானின் மன்னர் அப்துல்லாவின் ஒன்றுவிட்ட சகோதரர், இளவரசர் ஹம்சா, 41, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜோர்டான் மன்னராக, இரண்டாம் அப்துல்லா, 1999ல் பதவியேற்றார். அவரது ஒன்று விட்ட சகோதரரான ஹம்சா, பட்டத்து இளவரசராக இருந்தார். கடந்த, 2004ல், பட்டத்து இளவரசர் பட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. ஹம்சாவுக்கு வேறு பொறுப்புகள் உள்ளதாக, அப்போது, அப்துல்லா கூறினார்.இந்நிலையில், தான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, இளவரசர் ஹம்சா, 'வீடியோ' ஒன்றில் கூறியுள்ளார். மேலும், அரசுக்கு எதிராக, பல ஊழல் குற்றச்சாட்டுகளையும், அவர் முன் வைத்துள்ளார்.
இந்த வீடியோவை, ஐரோப்பிய நாடான பிரிட்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், பி.பி.சி., செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஹம்சா கைது செய்யப்பட்டதாக வந்துள்ள செய்தியை, அரசு மறுத்துள்ளது. ''ஹம்சா கைது செய்யப்படவில்லை; வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மைக்கான அவரது சில நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன,'' என, மூத்த ராணுவ அதிகாரியான, ஜெனரல் யூசுப் ஹூனெய்ட்டி கூறியுள்ளார்.இதற்கிடையே, அரச குடும்பத்தைச் சேர்ந்த, ஷரீப் ஹாசன் பின் ஜயீத் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசீம் இப்ராஹிம் அவாதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE