புதுடில்லி:கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணியின் கள நிலவரம் ஆகியவை குறித்து, பல்வேறு துறை செயலர்கள் உட்பட மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.
நாடு முழுவதும், கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை வேகம் எடுத்துள்ளது. மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், கர்நாடகா, தமிழகம், டில்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட, 10 மாநிலங்களில், தொற்று பரவலும், உயிரிழப்பும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பூசி பணிகளின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் சநேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், பிரதமரின் முதன்மை செயலர், அமைச்சரவை செயலர், உள்துறை செயலர், தடுப்பூசி போடும் குழுவின் தலைவர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின், அதில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் குறித்து, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக, மஹாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர்ஆகிய மாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
நாடு முழுவதும், தொற்று பரவல் எண்ணிக்கையில், 91.4 சதவீதமும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையில், 91 சதவீதமும், 10 மாநிலங்களில் பதிவாகி உள்ளன. மஹாராஷ்டிராவில், ஒரு நாள் பாதிப்பு, 47 ஆயிரத்து, 913 ஆக உள்ளது. அம்மாநில முந்தைய பாதிப்புகளை விட, தற்போது இரட்டிப்பாகி உள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள பாதிப்பு விகிதத்தில், 57 சதவீதமாகும். ஒட்டுமொத்த உயிரிழப்புகளில், 47 சதவீதமாக உள்ளது.
அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள்உள்ள மாநிலங்கள் குறித்து, பிரதமரிடம் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.முக கவசம் அணியாதது,தனி மனித இடைவெளியை பின்பற்றாதது உள்ளிட்ட கொரோனா நடத்தை விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்ட காரணத்தால் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.நாளுக்கு நாள் அதிகரிக்கும் தடுப்பூசி தேவை குறித்தும், தேவையான அளவு தடுப்பூசிகளை கையிருப்பு வைத்துக் கொள்வது, மற்ற நாடுகளுக்கு வழங்குவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
கடந்த ஆண்டு, நாம் பின்பற்றியதை போல, 'பரிசோதனை, தொற்று தடத்தை கண்டறிவது, சிகிச்சை, நடத்தை விதிமுறைகளை மதிப்பது, தடுப்பூசி போடுவது என்ற ஐந்து அடுக்கு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றினால் மட்டுமே, இரண்டாம் அலையை கட்டுப்படுத்த முடியும்' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், பொது சுகாதாரநிபுணர்கள் அடங்கிய மத்திய குழுவை, மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அனுப்பவும் பிரதமர் உத்தரவிட்டார்.நாளை முதல், 14 வரையில், சிறப்பு முகாம்கள் நடத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
'சிறிய அளவிலான ஊரடங்கு அவசியம்'
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவரும், மத்திய அரசின் கொரோனா தடுப்பு படையின் மூத்த உறுப்பினருமான டாக்டர் ரன்தீப் குலேரியா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளது. இதை கட்டுப்படுத்துவது மருத்துவத் துறையின் கடமை. நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரிய பாதிப்பு ஏற்படாமல், தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, நாம் சில அதிரடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தொற்று பரவல் தீவிரமாக உள்ள பகுதிகளில், சிறிய அளவிலான ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும். வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை சோதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE