மடத்துக்குளம்:மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், ஏப்., 16ம் தேதி நடப்பாண்டுக்கான கரும்பு அரவை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என, ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.அமராவதி சர்க்கரை ஆலையில் ஆண்டு தோறும் ஏப்., தொடங்கி செப்., வரை கரும்பு அரவை பருவமாகும். கணியூர், நெய்க்காரப்பட்டி, பழநி, ஆலைப்பகுதி, கொமரலிங்கம் பகுதியிலுள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து, ஒப்பந்தமுறையில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, அமராவதி சர்க்கரை ஆலையில் அரவை செய்யப்படுகிறது.கடந்த, 2019 -- 2020 ம் ஆண்டு 64 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டு, 54 ஆயிரம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆலையில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் அங்கத்தினர்களாக இருந்தாலும், ஆண்டுதோறும், 3,000 விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது.அரவைக்காக, பல மாதங்களுக்கு முன்பிருந்தே விவசாயிகளிடமிருந்து கரும்பு முன்பதிவு செய்வது வழக்கம். நடப்பு ஆண்டு அரவைக்கு, கடந்த ஆண்டிலிருந்து முன்பதிவு தொடங்கி நடந்தது. இதுவரை, 71 ஆயிரம் டன் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து நடப்பாண்டு அரவை ஏப்., 16ம் தேதி தொடங்குகிறது.இதுகுறித்து ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில், '2020 -- 21ம் ஆண்டிற்கான கரும்பு அரவை துவக்கவிழா நிகழ்ச்சி, வரும் 16ம் தேதி காலை, 9:30 முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது. தற்போது கோவிட் -19 வைரஸ் தாக்குதல் இருப்பதால், அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் இவ்விழாவில் பங்கேற்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE