ரெய்டு காரணமாக செலவுகள் குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ரெய்டு' காரணமாக செலவுகள் குறைப்பு

Added : ஏப் 04, 2021
Share
சென்னை: வருமான வரித் துறை சோதனையை காரணம் காட்டி, தி.மு.க., வேட்பாளர்கள் தேர்தல் செலவை குறைத்துள்ளதால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பொன்னேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க., வழங்கியுள்ளது. மீதமுள்ள ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தி.மு.க., வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள பலரும், நேர்காணலின்

சென்னை: வருமான வரித் துறை சோதனையை காரணம் காட்டி, தி.மு.க., வேட்பாளர்கள் தேர்தல் செலவை குறைத்துள்ளதால், கூட்டணி கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பொன்னேரி தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க., வழங்கியுள்ளது. மீதமுள்ள ஒன்பது தொகுதிகளில், தி.மு.க., போட்டியிடுகிறது. தி.மு.க., வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள பலரும், நேர்காணலின் போது, தேர்தலில் கணிசமான தொகையை செலவு செய்வதாக, கட்சி தலைமையிடம் உறுதியளித்தனர். இதை நம்பி, கட்சி தலைமையும், 'சீட்' வழங்கியது. ஆனால், ஒப்புதல் அளித்தபடி, வேட்பாளர்கள் செலவு செய்யவில்லை. தேர்தல் பிரசாரத்திற்கு வரும் தி.மு.க., நிர்வாகிகளுக்கு மட்டுமின்றி, கூட்டணி கட்சியினருக்கும், உணவை கூட பல வேட்பாளர்கள் வழங்குவது கிடையாது.

இந்நிலையில், தி.மு.க., தலைவர்ஸ்டாலின் மகள் செந்தாமரை உள்ளிட்ட பலரின் வீடுகளில், வருமான வரித் துறையினர் திடீர், 'ரெய்டு' நடத்தியுள்ளனர். பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினரும், தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர்.இதை காரணம் காட்டி, மாதவரம், கும்மிடிப்பூண்டி, ஆவடி, திருவள்ளூர், பூந்தமல்லி தொகுதி வேட்பாளர்கள் செலவை கணிசமாக குறைத்துள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினரையும், தங்களது தொண்டர்களையும், இரண்டு ரவுண்டு திருப்திபடுத்திய நிலையில், தி.மு.க., வேட்பாளர்கள் மவுனமாக உள்ளனர். இதனால், சொந்த கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

இது குறித்து, தி.மு.க., வேட்பாளர்களிடம், மாவட்ட நிர்வாகிகள் முறையீடு செய்துள்ளனர். அதற்கு வேட்பாளர்கள், 'கருத்து கணிப்புகள் எங்களுக்கு சாதகமாக உள்ளன. மக்கள் எங்களுக்கு ஓட்டு போட தயாராகி விட்டனர். பணத்தை எடுத்தால், ரெய்டில் மாட்டிக்கொள்வோம். நீங்க வேணா கொடுங்க; தேர்தல் முடிந்ததும் திருப்பி கொடுத்து விடுகிறோம்' என, 'அசால்டாக' கூறி, அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.பூத் செலவுக்கு கூட பணமில்லை அ.ம.மு.க., - தே.மு.தி.க., திணறல்அ.தி.மு.க.,வில், எம்.பி., -- எம்.எல்.ஏ.,வாக இருந்தவர்கள், அ.ம.மு.க., வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தென் மாவட்டங்களில் போட்டியிடுபவர்கள் பணம் படைத்தவர்கள் என்பதால், அவர்களுக்கு கட்சித் தலைமையிடம் இருந்து தேர்தல் செலவுக்கும், பூத் கமிட்டி அமைக்கவும் நிதி வழங்கப்படவில்லை.ஆனால், வட மாவட்டங்களில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வேட்பாளர்களில் சிலருக்கு, கட்சி தலைமை பணம் வழங்க திட்டமிட்டிருந்தது. வேட்பாளர்களும் அதை நம்பி, பூத் கமிட்டிகளுக்கு செலவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

தி.மு.க.,விற்கு வருமான வரித்துறையினர் கொடுத்த நெருக்கடி காரணமாக, அ.ம.மு.க.,வும் ரெய்டு பயத்தால், தேர்தல் நிதி கொடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டது.இதனால், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டியிடும், அ.ம.மு.க., - தே.மு.தி.க., வேட்பாளர்கள் பூத் கமிட்டிக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறுகின்றனர் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X