சென்னை: தேர்தல் பணப் பட்டுவாடா தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், இதுவரை, 100 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலில் சட்ட விரோதமாக பணம் மற்றும் பொருட்கள் வினியோகிப்பதை தடுக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி மண்டலம் சார்பில், 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.மார்ச், 1 முதல், நேற்று வரை, ஏராளமான புகார்கள் வந்தன. அவை தொடர்பாக, வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:தமிழக சட்டசபை தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடப்பதற்காக, பணப் பட்டுவாடாவை தடுக்க, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு, 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.நம்பத் தகுந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, சென்னை உட்பட, தமிழகம் முழுவதும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையில் இதுவரை, 77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 23 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உட்பட, பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது, அனைத்து சோதனைகளும் நிறைவு பெற்றுள்ளன.இனி ஆதாரப்பூர்வமான புகார்கள் வந்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். 2016 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், தற்போது, 65 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம் அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த, 2019 லோக்சபா தேர்தலை விட, 19 கோடி ரூபாய் அதிகம் பிடிபட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE