ஓய்ந்தது பிரசாரம்; துவங்கியது பட்டுவாடா!| Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஓய்ந்தது பிரசாரம்; துவங்கியது பட்டுவாடா!

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (2)
Share
தமிழகத்தில், நாளை சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., தரப்பில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா துவங்கியது. இந்த தேர்தல், ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வுக்கும், வாழ்வா, சாவா போராட்டமாக உள்ளது. மீண்டும் வெற்றிபத்து ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லாத தி.மு.க., இம்முறை எப்படியும், ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்ற துடிப்புடன்,
TN elections 2021, AIADMK, DMK

தமிழகத்தில், நாளை சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., தரப்பில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா துவங்கியது. இந்த தேர்தல், ஆளும் கட்சியான அ.தி.மு.க.,வுக்கும், எதிர்க்கட்சியான தி.மு.க.,வுக்கும், வாழ்வா, சாவா போராட்டமாக உள்ளது.


மீண்டும் வெற்றி

பத்து ஆண்டுகளாக, ஆட்சியில் இல்லாத தி.மு.க., இம்முறை எப்படியும், ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்ற துடிப்புடன், பிரசாரத்தில் ஈடுபட்டது.ஜெயலலிதா இல்லாத நிலையில், இம்முறை தோல்வியை தழுவினால், மீண்டும் வெற்றி வாய்ப்பு கிடைக்காது என்பதால், ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், அ.தி.மு.க.,வும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டது.

கடைசி கட்டமாக, இரு தரப்பினரும், நேற்று முன்தினம் வாக்காளர்களுக்கு பணப் பட்டு வாடாவை துவக்கினர். அ.தி.மு.க., சார்பில், பெரும்பாலான தொகுதிகளில், ஓட்டுக்கு 500 ரூபாய் வினியோகிக்கப்பட்டது. சில தொகுதிகளில், 1,000, 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. தி.மு.க., சார்பில், 300, 500, 1,000 என, தொகுதிகளுக்கேற்ப பட்டுவாடா செய்யப்பட்டது.இரு கட்சியினரும் போட்டி போட்டு, வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய நிலையில், ஒருவரை ஒருவர் போட்டு கொடுக்கவும் தயங்கவில்லை.

இதன் காரணமாக, தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டு அறை, 'டெலிபோன்' எண்கள், நேற்று முன்தினம் இரவு முழுதும், ஒலித்தபடி இருந்தன.கட்சியினர் கொடுத்த தகவல் அடிப்படையில், பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று, சோதனை நடத்தினர். பல இடங்களில், லட்சத்திலும், கோடியிலும் ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்; சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில இடங்களில், இரு கட்சியினர் இடையே, மோதல் சம்பவங்களும் அரங்கேறின. இது, ஓட்டுப் பதிவின்போதும் எதிரொலிக்குமோ என்ற கவலை, போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது.பிரசாரம் செய்ய, நேற்று இறுதி நாள் என்பதால், அதிகாலை முதல் இரவு, 7:00 மணி வரை, வேட்பாளர்கள் ஓட்டு சேகரித்தனர். அந்த சாக்கில், வீட்டுக்கு வீடு பட்டுவாடா செய்தனர். அதன் உச்சமாக, பல்லாவரம் தொகுதி, தி.மு.க., சார்பில், கீழ்கட்டளை பகுதிகளில், ரேஷன் கார்டு உள்ள குடும்பத்திற்கு தலா, 4000 ரூபாய் வழங்கினர்.


ரூ.8.42 கோடி

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்திக்குறிப்பு:தமிழகத்தில், நேற்று காலை வரை, 428.46 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 225.50 கோடி ரூபாய் ரொக்கம்; 176.11 கோடி ரூபாய் மதிப்பு தங்கம், வெள்ளி, வைரம்; 4.61 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள், 20.01 கோடி ரூபாய் மதிப்புள்ள பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடைசி, 72 மணி நேர கண்காணிப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தல் செலவின குழுக்களுடன் ரோந்து பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக, நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், 8.42 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை, '1950, 1800 4252 1950 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம். 'cVIGIL' என்ற 'மொபைல் ஆப்' வழியாகவும், புகார் அளிக்கலாம். புகார்தாரர்கள் விபரம், ரகசியமாக வைக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


அ.ம.மு.க., 'டோக்கன்' வினியோகம்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தினகரன் போட்டியிட்டபோது, 20ரூபாய் நோட்டை, 'டோக்கன்' ஆக கொடுத்தனர். தேர்தல் முடிந்த பின், பணம் தருவதாக, உறுதி அளித்தனர். வெற்றி பெற்ற பின், பணம் வழங்கப்படவில்லை.இந்த தேர்தலில், அ.ம.மு.க.,வினருக்கு, அக்கட்சி தலைமை பணம் வழங்கவில்லை. அதற்கு பதில், தொகுதிக்கு, 20 ஆயிரம் முதல், 75 ஆயிரம், டோக்கன்களை வழங்கியுள்ளது. தற்போது, 'டோக்கன்' வினியோகிக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் செல்வம், தன் படம் எதுவும் இல்லாமல், 'டோக்கன்' வினியோகிக்கிறார். சேலம் தெற்கில், வேட்பாளர் வெங்கடாஜலம், தினகரன் படத்துடன், 'டோக்கன்' வினியோகித்தார். பெண்கள் சிலர் வாங்கினர். ஆண்கள், 'ஆர்.கே.நகர் போன்று, 'அல்வா' கொடுக்க டோக்கனா?' என, கேள்வி கேட்டனர். இதனால், அ.ம.மு.க., நிர்வாகிகள், பதில் சொல்ல முடியாமல் தவித்தனர்.

--- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X