சிவகங்கை: ''கொரோனா இரண்டாம் அலையில், மரபணு மாறிய வைரஸ்களால், இளம் வயதினர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும்,'' என, சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்
.அவர் கூறியதாவது:கொரோனா இரண்டாம் அலை, பிப்ரவரியில் இருந்து, இந்தியாவில் ஏறுமுகத்தில் உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில், 89 ஆயிரத்து, 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரியில் ஒரே நாளில், 100 மரணங்களுக்குள் நிகழ்ந்த நிலையில், 24 மணி நேரத்தில், 714 பேர் உயிரிழந்து உள்ளனர்.7 மடங்கு உயர்வு:இந்த எண்ணிக்கை, இனி வரும் நாட்களில் உயர்ந்து உச்சத்தை தொடும். தமிழகத்தில், ஒரு மாதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, ஏழு மடங்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி, 'டீன்'கள் சிலர் கூறுகையில், 'சில நாட்களாக கொரோனாவுக்கு இளம் வயதினர், 'அட்மிட்' ஆகி வருகின்றனர். அவர்களிடையே பல்வேறு அறிகுறிகள் தென்படுகின்றன. அவை, விரைவில் நோய் முற்றுதல் நிலை ஏற்படுகிறது. நுரையீரலில் கொரோனா வைரசில் மாற்றங்கள் தென்படுகின்றன' என, தெரிவித்துள்ளனர்.
முதல் நிலையில் காய்ச்சல், இருமல், உடல் வலி போன்றவை இருந்தன. இந்த அலையில் வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி அதிகம் தென்படுகின்றன. 20 - 45 வயதினரிடையே பாதிப்பு அதிகமாக ஏற்படுவதால், அவர்கள், வீடுகளில் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.குறிப்பிட்ட எண்ணிக்கையினர் நோய் முற்றிய நிலையில், மருத்துவமனையில் வந்து சேர்கின்றனர். அதிலும் சிலருக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை முடிவுகள், 'நெகட்டிவ்' என வந்தாலும், நோய் நுரையீரலில் முற்றி, அறிகுறிகள் அதிகமாகும் தன்மை ஏற்படுவதையும் பதிவு செய்துள்ளனர்.
தற்போதைய அலையில், கொரோனா பாதிப்பு, நுரையீரலிலும் நுாடுல்ஸ் எனும் திட்டுகளாக தோன்றுகின்றன.சுவாச திணறல் இருப்பவர்கள், தீவிர கொரோனா நிலைக்கு முற்றுகின்றனர். அவர்களது சி.டி., ஸ்கேன் ரிப்போர்ட்டில், பெரிய பாதிப்பு இருப்பதாக தெரியவில்லை. இது, பெரிய புதிராக உள்ளது. இதற்கு, மரபணு மாறிய வைரஸ்களின் வருகையே காரணமாக இருக்கலாம்.இது, தற்போது 45 வயதிற்கு மேல் என்று இல்லாமல், இளம் வயதினரையும் தாக்கி வருகிறது. இதில், இளம் பெண்கள் பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதை, எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்.வீடுகளுக்குள் இருங்கள் முடிந்த அளவுக்கு வீடுகளுக்குள் நேரத்தை செலவிடுங்கள். வெளியே வரும் போது, முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.
முதியவர்கள் மட்டும் அல்லாமல், இளம் வயதினர் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகலாம்.அரசு, 45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து, சிந்திக்க வேண்டும். இரண்டாவது அலையை சாதாரணமாக எடை போடாதீர்கள். அறிகுறிகள் தோன்றினால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அலட்சியம் ஆபத்தானது. எச்சரிக்கை உணர்வு உயிர் காக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE