சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஏப் 05, 2021
Share
Advertisement
கொரோனாவை விட கொடியது!எஸ்.ஹரிஹரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாளை, தமிழகத்தை ஆள்வது யார் என்பதை தேர்ந்தெடுக்கும் நாள். அனைவரும் ஓட்டுப் பதிவு செய்ய, நமக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.தனியார் நிறுவனங்களும், தங்கள் ஊழியர் அனைவருக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. எல்லாம் எதற்காக... 100
 இது உங்கள் இடம்

கொரோனாவை விட கொடியது!

எஸ்.ஹரிஹரன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாளை, தமிழகத்தை ஆள்வது யார் என்பதை தேர்ந்தெடுக்கும் நாள். அனைவரும் ஓட்டுப் பதிவு செய்ய, நமக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.தனியார் நிறுவனங்களும், தங்கள் ஊழியர் அனைவருக்கும், சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.

எல்லாம் எதற்காக... 100 சதவீத ஓட்டுப்பதிவாகி, ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக!கடந்த, 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில், 75 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது; 25 சதவீதம் பேர் ஓட்டுப்பதிவு செய்யவில்லை.அதிலும், சென்னை நகரை பொறுத்த அளவில், 65 சதவீதத்திற்கும் குறைவாகவே ஓட்டுப்பதிவு இருந்துள்ளது. அடிப்படை வசதி இல்லாத கிராமத்தில் கூட, 80 சதவீத ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

சில கிராம மக்கள், வெகுதொலைவு நடந்து சென்று, ஓட்டு அளிக்க வேண்டிய நிலை உள்ளது. என்றாலும், அதை பொருட்படுத்தாமல், அக்கிராம மக்கள் தங்களது ஜனநாயக கடமையை செம்மையாகவே நிறைவேற்றுகின்றனர்.சென்னையில், ஏராளமான ஓட்டுப்பதிவு மையங்கள் உள்ளன. வாக்காளர்கள், வெயிலில் வாடாமல் இருக்க, தகுந்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஆனாலும், சென்னைவாசிகள், ஓட்டு அளிப்பதில் முழு அக்கறை செலுத்துவது இல்லை.ஒருவேளை, சென்னை வாசிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதால், 'மெதப்பில்' இருக்கின்றனரா எனத் தெரியவில்லை.

நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பெரும் ஜனநாயக ஆயுதமான, ஓட்டு உரிமையை பயன் படுத்தாமல் இருப்பது, பெரும் குற்றம்; நம் நாட்டுக்கு செய்யும் துரோகம்.நடுநிலை வாக்காளர்கள், ஓட்டுப்போடாமல் இருப்பதால், நல்ல தலைவர்கள், மக்கள் பிரதிநிதியாகும் வாய்ப்பு பறிபோகிறது; தகுதியில்லாத நபர்கள், சட்டசபைக்கு செல்வதற்கு காரணமாக இருக்கிறது.'வெயில், காத்திருப்பு, யார் வந்தால் என்ன...' என்ற காரணங்களோடு, கொரோனா நோய் பரவலையும் சேர்த்து, ஓட்டு போடாமல் இருப்பதற்கு, 'சால்ஜாப்பு' சொல்லாதீர்.

ஓட்டுச் சாவடிகளில், கொரோனா நோய் பரவலை தடுக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதைக் காரணம் காட்டி, ஓட்டு அளிக்க தவறினால், கொரோனாவை விட கொடுமையான ஆட்சியாளர்களிடம் நாம் சிக்கிக் கொள்ள நேரிடும். தமிழகத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவு நிகழ்ந்தாலே, நல்ல தலைவர்கள் நமக்கு கிடைப்பர்.lll

'சனிப் ப்ரீதி' யாகம் செஞ்சுருங்க!

மணிமேகலை, கூத்தம்பாளையம், திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல, தி.மு.க.,வின் அந்திம காலம் நெருங்கிவிட்டது என்பதை, அக்கட்சியினரின் அராஜக ஆட்டம் எடுத்துக் காட்டுகிறது. தி.மு.க., சார்பில் நடந்த, 'கிராமசபை' என்ற நாடகத்தை, ஸ்டாலினின் நடிப்பில் அரங்கேற்றியதும், அதில் அவர் தப்புத்தப்பாக உளறியதும், ஊரே சிரிக்கும் அளவுக்கு காமெடியாக இருந்தது.

மத்திய அமைச்சர் பதவி வகித்த, ஆ.ராசா போன்றோர், அரசியல் நாகரிகத்திற்கும், கண்ணியத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வருவது, தி.மு.க.,விற்கு முடிவுரை எழுதுவது போல தெரிகிறது.தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஹிந்துக்களுக்கு எதிராக பேசியதெல்லாம், இப்போது அவர்களுக்கு எதிராக மாறி வருகின்றன. அவர்களின் நாக்கில், சனியின் ஆதிக்கம் பிரவாகமாக பெருக்கெடுத்து ஓடுவதால், துர்கா ஸ்டாலின், தி.மு.க.,விற்காக, 'சனிப் ப்ரீதி' யாகம் செய்து கொள்வது, ஓரளவு உத்தமம் தரும்.ஏனெனில், தி.மு.க., வினரின் அராஜகம் மற்றும் அநாகரிக பேச்சு, அவரது கணவரின், முதல்வர் கனவில் மண் அள்ளிப் போட்டுவிடும்.

ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு எதுக்கு?
அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிழைப்புக்காக வெளியூர்களில் இருந்தாலும், தேர்தல் நாளன்று, சிரமத்தை பொருட்படுத்தாமல், சொந்த ஊருக்கு சென்று, ஓட்டுப்பதிவு செய்யும் எளியோர் தான், நம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்றனர்.ஆனால் உள்ளூரில் இருந்தாலும், ஏதாவது காரணத்தை தனக்கு தானே சொல்லியபடியே, வசதியானோர் சிலர், ஓட்டு சாவடிக்கு செல்ல மறுக்கின்றனர்.

இவர்களை என்னவென்று சொல்வது?நம்மை யார் ஆள வேண்டும் எனத் தீர்மானிக்க, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும், இந்த ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்று, ஓட்டளிக்க, இந்திய குடிமக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.நமக்கு கிடைத்திருக்கும் ஓட்டு உரிமையை, ஒருபோதும் ஜாதி, மதம் பாராமல், பணத்திற்கு விலை போகாமல் பயன்படுத்த வேண்டும்.ஒரு சீப்பு வாங்க வேண்டும் என்றாலே, அதன் தரத்தை பலமுறை சோதித்து வாங்குகிறோம்;

ஆனால், நம்மை யார் ஆள வேண்டும் என்பதை மட்டும், சிந்தித்து ஓட்டளிக்க மறுக்கிறோம். பிறரின் சொல்படியும், 'பாரம்பரியமாக இந்த கட்சிக்குத் தான் ஓட்டுப் போட்டு வருகிறோம்' எனச் சொல்லியும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்யாதீர்.ஊழல்வாதி எனத் தெரிந்தும், அதிகாரம் கிடைத்தால் அராஜகத்தில் ஈடுபடுவர் என்பதுதெரிந்தும், அக்கட்சிக்கு ஓட்டு அளிப்பது, முட்டாள்தனம் அல்லவா!

மறைந்த எழுத்தாளர் சுஜாதா கூறிய கருத்துகளை, மக்கள் பின்பற்ற வேண்டும்.கட்சி, சின்னம், ஜாதி, சாமி பார்த்து ஓட்டுப் போடக் கூடாது; வேட்பாளரைப் பார்த்து ஓட்டு போட வேண்டும். முக்கியமாக, நாம் யாருக்கு ஓட்டு அளிக்கிறோமோ, அவர் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சமூக சேவகர் ஒருவர் சுயேச்சையாக நின்றாலும், நிச்சயம் அவர் தோற்று விடுவார் என்று தெரிந்தாலும், அவருக்கு ஓட்டு அளியுங்கள்.

உங்கள் ஓட்டு, நிச்சயம் அவரின் அவமானகரமான தோல்வியைத் தவிர்க்கலாம்; ஆனால், அதுவே அவருக்கு அடுத்த தேர்தலில் நம்பிக்கையைக் கொடுக்கலாம்.யார் ஒருவர், உங்களின் பார்வையில் நேர்மையானவராக தோன்றுகிறாரோ, அவருக்கு ஜாதி, மதம், கட்சி பார்க்காமல் ஓட்டளியுங்கள்.

அப்படி நீங்கள் பதிவு செய்யும் ஓட்டு, யார் ஆட்சிக்கு வர வேண்டாம் என நினைப்பவரை, தோல்வி அடைய செய்யும்.சுஜாதாவின் இந்த அறிவுரையை, வாக்காளர் அனைவரும் பின்பற்ற வேண்டும். நாளை, 100 சதவீத ஓட்டுப்பதிவு செய்து, நல்ல ஆட்சி அமைய வழி வகுப்போம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X