உணவில் எப்போதும் தயிர் உண்டு!
எப்போதும்வெள்ளை வெளேரென்றும், துாங்கி எழுந்தது போல, 'பிரெஷ்'ஷாகவும் காட்சி அளிப்பது எப்படி; அதற்கு என்னென்ன செய்கிறார் என்பது பற்றி நடிகை தமன்னா:
எவ்வளவு தான் வேலை இருந்தாலும், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், உடற்பயிற்சி மேற்கொள்வேன்; கூடவே யோகாசனமும் உண்டு. அதை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளேன்.தினமும் இரவில், ஏழு மணி நேரம் துாங்கி, அதிகாலையில் சீக்கிரம் எழுந்து விடுவேன். பகல் துாக்கம் அறவே கிடையாது.
பகலில் துாங்கினால், உடல் எடை அதிகரிக்கும் என சொல்வதால், அதற்கு, 'நோ!'உணவில் கண்டிப்பாக தயிர் இருக்கும். அது, உடலை குளிர்ச்சி யாக வைத்திருக்க உதவும் என்பதால், தயிரின்றி உணவு கிடையாது. மூன்று வேளை உணவிலும் தயிர் நிச்சயம் இருக்கும்.அத்துடன் உணவில் பழச்சாறுகள், சூப்புகள் கட்டாயம் இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வேன். அடிக்கடி தண்ணீர் அருந்தி, உடலில் நீர்ச்சத்தை, 'பேலன்ஸ்' செய்து கொள்வேன்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்து குடிப்பேன். அப்புறம், ஊற வைத்த பாதாம் கொட்டைகள் சிலவற்றை தினமும் எப்போதாவது சாப்பிடுவேன். இவ்வாறு செய்வதால், தோலின் மிருது தன்மை மற்றும் பளபளப்பு பராமரிக்கப்படுகிறது.
'ஷூட்டிங்' இல்லை என்றால், முகத்திற்கு அன்று, 'ரெஸ்ட். மேக்கப்' போடுவது இல்லை. அதே நேரத்தில், முகத்தின் அழகை பராமரிக்கும் வகையில், 'கிளென்சிங், டோனிங், மாய்ஸ்சரைசிங்' போன்றவற்றை செய்வது உண்டு. மேலும், மஞ்சள்,கடலை மாவு, வேப்பிலை கலந்த, வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாவை, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து தண்ணீரால் கழுவிக் கொள்வதும் உண்டு. ரசாயனம் கலந்த ஷாம்புகளுக்கு பதிலாக, சீகக்காய், நெல்லிக்காய், பப்பாளி போன்ற இயற்கை பொருட்களால் ஆன பேஸ்டை பயன்படுத்தி, தலைமுடியை கழுவுகிறேன்.
அத்துடன் தலை முடியில் தேங்காய் எண்ணெய் தடவி, சிறிது நேரம் கழித்து, நன்கு தேய்த்து குளித்து விடுவேன்.முடி உதிர்வதை தடுக்க, வெங்காயச் சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, சுட வைத்து, சூடு ஆறிய பின் தலையில் தடவி வருவேன். இது போன்ற பல நடைமுறைகளை பின்பற்றுவதால் அழகாகவும், பளீர் தோற்றத்துடனும் இருக்கிறேன்.என்ன... நீங்களும், என் அழகு குறிப்புகளை பின்பற்றி, பளிச் அழகுடன் உலா வரத் தயாரா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE