திருப்பூர்:சம்பள ஒப்பந்த பேச்சு துவக்க, தேர்தலுக்குப்பின், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க, திருப்பூர் பனியன் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.கடந்த 2016ல் போடப்பட்ட பனியன் தொழிலாளர் சம்பள ஒப்பந்தம், 2020, மார்ச்சில் முடிவடைந்தது. கொரோனாவால், புதிய ஒப்பந்தத்தில் இடம்பெறவேண்டிய ஷரத்துக்கள் குறித்து, தொழிற் சங்கங்கள் சார்பில், உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கருத்துரு அளிக்கப்பட்டது.கொரோனா பரவல்; முழு ஊரடங்கு காரணமாக, ஒப்பந்த பேச்சு துவக்க முடியாத நிலை ஏற்பட்டது.கடந்த 2020 மே மாதம், ஊரடங்கு தளர்த்தப்பட்டதையடுத்து, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயக்கத்தை துவக்கின. ஆனாலும், உற்பத்தியாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தையை துவக்கவில்லை. தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தின.இதையடுத்து, கடந்த பிப்ரவரி 22ல், ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - பனியன் தொழிற்சங்கங்கள் இடையே, முதல் சுற்று சம்பள ஒப்பந்த பேச்சு நடைபெற்றது.முதல் சுற்று பேச்சுவார்த்தையில், உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழில் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்; தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் பிரச்னைகளை முன்னிறுத்தி பேசினர்.இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் காரணமாக, ஒப்பந்த பேச்சு நடைபெறவில்லை. தொழிற்சங்கத்தினர், தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றுடன், பிரசாரம் ஓய்ந்துள்ளது; நாளை (6ம் தேதி), ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலுக்குப்பின், சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க, உற்பத்தியாளர் சங்கங்களை வலியுறுத்த, முடிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE