இது, ஒரு வித்தியாசமான தேர்தல். இப்படி சொல்வது ஒரு சம்பிரதாயம். என்றாலும், அதில் உண்மை இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுமே, முந்தைய தேர்தலை காட்டிலும் வித்தியாசமாகத்தான் இருக்கும்.ஜெயலலிதாவும், கருணாநிதியும் இல்லாத, முதல் தேர்தல் என்பது சலிக்க வைக்கும் எடுத்துக்காட்டு.

இரண்டு பிரதான கட்சிகளிலும் இழப்பு என்கிற வகையில், அக்கட்சிகள் தொடர்ந்து சம நிலையில் இருக்கிறது என்பது எதார்த்தம். ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் சளைத்தவர்கள் அல்ல. பெரும்பாலும் என சொல்வதற்கு காரணம், அடிப்படையில் சில வேறுபாடுகள் இருப்பதை கோடிட்டு காட்டத்தான். பிரசாரத்திலேயே கவனித்து இருப்பீர்கள்.
அமைதியான முறையில், யாரும் புண்பட்டு விடக்கூடாது என்கிற ஒரு அச்சத்துடன், என்ன குறை இருந்தாலும் கடைசி நேரத்தில், 'கரன்சி'யை கொடுத்து சரி செய்து விடலாம் என்கிற அதீத நம்பிக்கையுடன் செயல்படுவது, அ.தி.மு.க.,வின் வழி என்றால்,
எடுத்த எடுப்பிலேயே தடாலடியாக, 'என்ட்ரி' கொடுப்பது, எவர் என்ன சொன்னாலும் உரத்த குரல் எழுப்பும்போது அது கேட்காது என்கிற நம்பிக்கையுடன், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்கிற நவீன ஆயுதத்தின் துணையுடன் திரும்பத் திரும்ப ஒரே பிம்பத்தை கட்டமைப்பது, தி.மு.க.,வின் வழி.இருவரின் தேர்தல் அறிக்கைகள், வாக்குறுதிகள் குறித்து போதுமான அளவு பொதுவெளியில் அலசப்பட்டுள்ளது. எனவே, அவற்றை இங்கே தொடத் தேவையில்லை. பிரசாரத்தில் இரு தரப்பிலும் பளிச்சென தெரிந்த ஓட்டைகளை, யாரும் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.
மது விலக்கு அந்த வரிசையில் முதலாவது. இரு கட்சிகளுமே, 'டாஸ்மாக்' குறித்த தெளிவான வாக்குறுதி எதையும் வழங்கவில்லை. அரசுக்கு வருமானம் கிடைக்கிற முக்கியமான வழி அடைபட்டு விடக்கூடாது என்ற பயமா அல்லது ஆளும் கட்சிக்கு அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்கான மந்திரப் பெட்டியை உடைத்து நொறுக்குவானேன் என்ற அக்கறையா? இரு கட்சிகளும், ஒ.கு.ஊ.ம., என்ற விமர்சனத்தை வலுவாக்கும் பொதுவான அணுகுமுறை.கோவில்கள் நிர்வாகம், கடவுள் பெயரில் பக்தர்கள் எழுதி வைத்த சொத்துக்கள் பாதுகாப்பு இன்னொரு முக்கியமான பிரச்னை. இதிலும், இரு கட்சிகளும் மிகுந்த ஜாக்கிரதையுடன் மவுனம் காக்கின்றன. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், இந்த மவுனம் மிகுந்த அர்த்தமுள்ளது.
பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மதிப்பு மிகுந்த நகர்ப்புற மனைகள் யாருடைய ஆக்கிரமிப்பு அல்லது அனுபோகத்தில் நீண்டகாலமாக இருக்கின்றன என்ற பட்டியலை பார்த்தால் அர்த்தம் விளங்கும்.கோவில் சொத்துகளை நிர்வகிக்க அரசாங்கத்துக்கே எந்த உரிமையும் கிடையாது என, வாதிடப்படும் நிலையில், அந்த சொத்துகளை அரசு கையகப்படுத்தி ஏழைகளுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்கிற அபாரமான கோரிக்கையை, தி.மு.க., கூட்டணியில் உள்ள ஒரு கட்சி முன்வைத்தபோது, மன்னரின் ஆடை எந்தத் தறியில் நெய்யப்பட்டது என்ற உண்மை அம்பலத்துக்கு வந்து விட்டது.
அதன் தொடர்ச்சியாக தனிப்பட்ட பேட்டிகளில், இந்தக் கேள்வி முன்வைக்கப்பட்ட போதிலும், ஸ்டாலின் இந்த நிமிடம் வரை நேரடியாக பதில் சொல்லவே இல்லை.இ.பி.எஸ்., வழிநடத்தும், அ.தி.மு.க., கூட்டணியில் அந்தளவுக்கு புரட்சிகரமான கோரிக்கையை எவரும் வைக்கவில்லை என்றாலும், பெருவாரியான சராசரி மக்களின் மனதை வருத்தும் இப்பிரச்னையில் அவர்களும் நேர்மையாளர்களாக அடையாளம் காணப்படவில்லை.
தி.மு.க.,வுக்கு இந்த தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும் என, பெரும் செலவில் திட்டமிட்டு ஒரு நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்ட பிம்பம் பலரது கவனத்தை கவர்ந்தது உண்மையே. ஆனால், என்ன காரணத்தால் அந்தக் கட்சியை அடுத்தடுத்த, இரண்டு தேர்தல்களில் தமிழக மக்கள் நிராகரித்தனர் என்பதை மேற்படி நிறுவனம் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. புரிந்து கொண்டிருந்தால், மக்கள் மனதில் தேங்கிவிட்ட பழைய பிம்பத்தை அழித்து விட்டு, அங்கே புது பிம்பத்தை பதிக்க முயன்றிருப்பார்கள்.
பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று, தமிழக மக்கள் நான்கு பக்கங்கள் நிறைந்த நினைவுகளோடு பொழுதை தொடங்கினார்கள். நில அபகரிப்பு தொடங்கி, 'ஓசி' பிரியாணி வரை, தி.மு.க., ஆட்சியில் நடந்த முக்கிய அசம்பாவிதங்களின் தொகுப்பை அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாக வெளியிட்டு இருந்தது, அ.தி.மு.க., மேலிடம். 18 வயது பூர்த்தியாகி புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்தவர்களை தவிர, அனைவருமே அறிந்த மறக்க முடியாத சம்பவங்கள் அவை.
தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அந்த சம்பவங்களில் எதுவும் மீண்டும் அரங்கேற, எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டேன் என்ற ஒற்றை வாக்குறுதியை தமிழக மக்கள் எதிர்பார்த்தார்கள். அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ள ஒரு சாக்காக அவர்களுக்கு தேவைப்பட்டது அந்த ஒரு உறுதிமொழி மட்டுமே.

அதை வழங்க, ஸ்டாலினுக்கு மனம் இல்லையா அல்லது அவரது நேர்மையான மனசாட்சி அதற்கு இடமளிக்கவில்லையா என்பது நமக்கு தெரியாது. நல்லதொரு வாய்ப்பை அவர் இழந்துவிட்டார் என்பது மட்டும் விளங்குகிறது. அராஜகம், ரவுடியிசம் போன்ற வார்த்தைகள், தி.மு.க.,வின் மறுபெயர்களாக வலம் வருவது சமீபத்திய சரித்திரம் அல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்பே அதன் தோற்றம் அப்படித்தான் மக்கள் மூளையில் பதிவாகி இருந்தது. அதனால்தான், தி.மு.க., -- த.மா.கா., கூட்டணி உருவான நேரத்தில், 'இனி அமையும், தி.மு.க., ஆட்சியில் அதுபோன்று (அராஜகம்) நடக்காது என்பதற்கு நானே உறுதி அளிக்கிறேன்' என்று ரஜினிகாந்த் ஒரு வாக்குறுதி வழங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்த தேர்தலில், தி.மு.க., தலைமை ஏமாற்றம் தந்த இன்னொரு நடவடிக்கை, அதன் வேட்பாளர் தேர்வு. பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களை மீண்டும் நிறுத்தி இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து விட்டது. அ.தி.மு.க.,வின் பண பலத்தை எதிர்கொள்ள, ஏராளமாக சொத்து சேர்த்து வைத்துள்ளவர்களை நிறுத்தினால்தான் சரியாக இருக்கும் என்ற கணக்கு.
மக்கள் மத்தியில் நல்லபெயர் வாங்கியவர்கள், நேர்வழியில் செல்வாக்கு பெற்றவர்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட காலம் அடியோடு மாறிவிட்டது. இதனாலேயே, கட்சிகளில் தனி மனிதர்களின் அல்லது வட்டார தலைவர்களின் வளர்ச்சி தடைபட்டு, தலைமையின் கையில் அதிகாரம் குவிய வழி ஏற்பட்டது.
யாரை நிறுத்தினால் என்ன, கட்சியின் பெயரும், சின்னமும் பார்த்துதானே மக்கள் ஓட்டு போடப் போகிறார்கள்! என்ற மமதை கட்சிகளில், தலைமை நிலையங்களில் உருவானது இப்படித்தான். வேட்பாளர் தனது தொகுதியை முழுமையாக சுற்றி வரக்கூட அவகாசம் இல்லாத வகையில் சேஷன் தொடங்கி, பின்னர் வந்த தேர்தல் கமிஷனர்கள் செய்த கெடுபிடிகளும் இதற்கு உதவின. கட்சி தலைமைகளின் ஜனநாயக விரோதமான இந்த ஆணவப் போக்குக்கு முடிவு கட்டும் அதிகாரம் ஆணையத்துக்கு கிடையாது.
வாக்காளர்களாகிய பொது மக்களிடம்தான் அந்த ஆயுதம் இருக்கிறது. வேட்பாளர் நல்லவரா என்பதை பார்த்து தான் நான் ஓட்டுபோடுவேன் என, ஒவ்வொரு வாக்காளரும் முடிவு செய்தால், தலைவர்கள் திருந்த, முதல் கதவு திறக்கும்.
கட்சியையும் பார்க்க வேண்டாம், சின்னத்தையும் தேட வேண்டாம். இருப்பதில் இந்த வேட்பாளர், 'பெட்டர்' என, ஒருவரை அடையாளம் காண முடிந்தால், அதன் பிறகு, அவர் சின்னம் எது என அறிந்து, பட்டனை அழுத்தலாம். அவர், தி.மு.க., அல்லது அ.தி.மு.க., கூட்டணியாக இருக்கலாம்; கமல் அல்லது சீமான் கட்சியாக இருக்கலாம்; தினகரனின், அ.ம.மு.க.,வாகவோ, சுயேச்சையாகவோ கூட இருக்கலாம்.
ஆட்சி அமைக்க முடியாத கட்சிக்கு ஓட்டு போடுவது, 'வேஸ்ட்' என்ற எண்ணத்தில் இருந்து, நாம் முதலில் விடுபட வேண்டும். ஒரு இந்தியனின் ஓட்டு ஒருநாளும் வீணாகப் போகாது. அது சொல்லும் சேதி உரியவர்களுக்கு எட்டாமல் போகாது. அதன் மதிப்பு சில ஆயிரங்களில் அடக்க முடியாதது.கட்டாயம் ஓட்டுச்சாவடிக்கு செல்லுங்கள். விலை மதிப்பு இல்லாத உங்கள் ஓட்டை நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு செலுத்துங்கள். கடமையை செய்வோம். பலன் கிடைக்காமல் போகாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE