'நீட்' தேர்வில் போதிய அளவுக்கு மதிப்பெண் பெற முடியாத விரக்தியில், தன் உயிரை மாய்த்துக் கொண்டவர் அனிதா. 'நீட் தேர்வால் உயிர் இழந்தவர்' என, அவர் இறந்தது முதல், தி.மு.க., சொல்லி வருகிறது. அவருடைய குடும்பத்துக்கு, தி.மு.க., தரப்பில் ஆறுதலும், உதவியும் செய்யப்பட்டது.

கடந்த, 2017ல் நடந்த இந்த சம்பவத்தை, லோக்சபா தேர்தலிலும் பிரசாரத்துக்காக, தி.மு.க., பயன்படுத்தி, அனுதாப ஓட்டுக்களை அறுவடை செய்தது. இப்போதும், அதை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகிறது.
குறிப்பாக, நீட் அனுமதி விவகாரத்தில், டில்லிக்கு சென்று, தமிழக அரசு சார்பில் கையெழுத்திட்டவர் அமைச்சர் மாபா பாண்டியராஜன் என்பதால், அவர் போட்டியிடும் ஆவடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் நாசர், இந்த விவகாரத்தை கையில் எடுத்து தீவிர பிரசாரம் செய்கிறார்.
இந்நிலையில், உயிரிழந்த அனிதா, அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பேசுவது போல சித்தரிக்கும் வீடியோ ஒன்று, அமைச்சர் பாண்டியராஜனின், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியானது. அதில், 'தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்க வேண்டாம்' என, அனிதாவே கேட்பது போல உள்ளது.

அனிதாவின் அண்ணன் மணிரத்னம், அமைச்சர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். வீடியோவும் வெளியிட்டிருக்கிறார். அதில், 'அமைச்சர் அவர்களே, இது, எவ்வளவு கேவலமான வேலை? உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்து, லட்சியம் நிறைவேறாம அவங்க இறந்திருந்தா, இந்த மாதிரி செய்வீர்களா?' என, அதில் கேட்கிறார். பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் இருந்து அதை அமைச்சர் நீக்கி இருக்கிறார். 'என் டுவிட்டர் கணக்கில், எனக்கு தெரியாமல், யாரோ அந்த வீடியோவை பதிவிட்டுள்ளனர். பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என, அமைச்சர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE