பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்படுமா? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பணம் பிடிபட்ட தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்படுமா?

Updated : ஏப் 06, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (11)
Share
தமிழக சட்டசபை பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும், நாளை நடக்க உள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நம் நாளிதழின், 'தேர்தல் களம்' பக்கத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:தேர்தல் பாதுகாப்பு பணிகள் எப்படி உள்ளன? அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக
election, தேர்தல்

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலும், கன்னியாகுமரி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலும், நாளை நடக்க உள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வரும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, நம் நாளிதழின், 'தேர்தல் களம்' பக்கத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி:


தேர்தல் பாதுகாப்பு பணிகள் எப்படி உள்ளன?

அசம்பாவிதங்கள் எதுவுமின்றி, அமைதியாக ஓட்டுப்பதிவு நடக்க, அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். பாதுகாப்பு பணியில், 30 ஆயிரம் போலீசார்; ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற போலீசார், ஊர் காவல் படையினர் என, 30 ஆயிரம் பேர்; 24 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள்; பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள, ஊர் காவல் படை உட்பட போலீஸ் அல்லாதவர்கள், 18 ஆயிரம் பேர் என, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், போலீசார் பாதுகாப்பு பணியில் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் வரிசையை ஒழுங்குபடுத்தும் பணியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


தேர்தலை ஒட்டி மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். வாக்காளர்கள் அமைதியாக வந்து ஓட்டளிக்க, ஏராளமான பணிகளை செய்துள்ளோம். ஜனநாயகம் தழைக்க, அனைவரும் கண்டிப்பாக ஓட்டளிக்க வர வேண்டும். இம்முறை, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாதனை படைக்க, அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில், ஓட்டுச்சாவடிக்கு வந்து, ஓட்டளிக்க வேண்டும்.


கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஓட்டுப்பதிவு எப்படி இருக்கும் என, எதிர்பார்க்கிறீர்கள்?

நம் மாநிலத்தை விட அதிகமாக, பீஹாரில் தொற்று பரவல் இருந்தபோதே, அங்கு தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்தனர். அதைவிட ஆர்வமாக, தமிழக மக்கள் ஓட்டளிப்பர். கொரோனா பாதிப்பு ஏற்படாமல், மக்கள் பாதுகாப்பாக வந்து ஓட்டளிக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.ஓட்டுச்சாவடிக்கு வருவோர் அனைவரும், கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். வரிசையில், ஆறு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். வாக்காளர்களின், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அந்த வாக்காளர், ஓட்டுப்பதிவு அன்று மாலை, கடைசி ஒரு மணி நேரத்தில் வந்து ஓட்டளிக்கலாம்.

அப்போது, அவருக்கு பாதுகாப்பு கவச உடை வழங்கப்படும். ஓட்டுச்சாவடி அலுவலர்களும், பாதுகாப்பு கவச உடை அணிந்திருப்பர். இதற்கு தேவையான ஏற்பாடுகளை, தேர்தல் கமிஷன் செய்துள்ளது. வாக்காளர்கள் அனைவருக்கும், கைகளை சுத்தம் செய்து கொள்ள, கிருமி நாசினி வழங்கப்படும். ஓட்டுப் போட கையுறை வழங்கப்படும். எனவே, பொது மக்கள் எவ்வித பயமும் இல்லாமல், ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிக்கலாம்.


ஒரு வாக்காளர் ஓட்டளிக்க வரும் போது, அவரது ஓட்டை வேறு நபர்கள், ஏற்கனவே பதிவு செய்திருந்தால், அந்த வாக்காளர் ஓட்டளிக்க முடியாதா?

ஒருவர் ஓட்டை மற்றொருவர் பதிவு செய்திருந்தால், உண்மையான வாக்காளர், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் அனுமதியுடன், 'டெண்டர் ஓட்டு' அளிக்கலாம். அவருக்கு ஓட்டுச்சீட்டு வழங்கப்படும். அதில், அவர் தன் ஓட்டை பதிவு செய்யலாம். அந்த ஓட்டு, தனி கவரில் சீலிடப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கையில் சமநிலை ஏற்பட்டால், இந்த ஓட்டு பரிசீலிக்கப்படும்.


வாக்காளர்களுக்கு, அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பது, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருகிறது. இதை, தேர்தல் கமிஷனால் தடுக்க முடியாதா?

இதுவரை இல்லாத அளவுக்கு, இம்முறை உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட, ரொக்கப் பணம், தங்கம், வெள்ளி என, 400.15 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.வருமான வரித் துறையினர், பல்வேறு சோதனைகள் நடத்தி, ஏராளமான பணம் பறிமுதல் செய்துள்ளனர். பணம் கொடுத்ததாக, ஏராளமானோர் பிடிபட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.


பணம் அதிகம் பிடிபட்ட தொகுதிகளில், தேர்தல் நிறுத்தப்பட வாய்ப்பு உண்டா?

தற்போதைக்கு எதுவும் இல்லை. பணம் பிடிபட்டது குறித்து, தேர்தல் பார்வையாளர், தேர்தல் செலவின பார்வையாளர், மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அளிப்பர். அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும்.


பொது மக்கள் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?

பொது மக்கள் புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண், '1950' ஏற்படுத்தப்பட்டது. 'சிவிஜில்' எனும், 'மொபைல் ஆப்' ஏற்படுத்தப்பட்டது. இவற்றின் வழியே, ஏராளமானோர் புகார் அளித்தனர். நேற்று முன்தினம், அதிக அளவில் பணப் பட்டுவாடா தொடர்பான புகார்கள் வந்தன. உடனுக்குடன் புகார்கள் வந்த இடத்திற்கு, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினரை, அனுப்பி வைத்தோம். ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு, தபால் ஓட்டு சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று, புகார் எழுந்துள்ளதே?

நீதிமன்ற அறிவுரையின்படி, முறையாக அனைத்து ஊழியர்களுக்கும், தபால் ஓட்டு படிவம் வழங்க, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அதன்படி, அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்த இடங்களிலேயே, விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டது.சிலர் படிவம் பெற்று, பூர்த்தி செய்து தராமல் உள்ளனர். அதை உடனே வழங்கி, தபால் ஓட்டுகளை பெற்று, முறையாக பூர்த்தி செய்து வழங்கும்படி, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தபால் ஓட்டு கிடைக்கவில்லை என, புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.


கொரோனா நேரத்தில், தேர்தல் நடத்துவது பெரும் சவாலாக உள்ளதா?

வழக்கமாக, 63 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் இருக்கும். தற்போது, கொரோனா காரணமாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 88 ஆயிரத்து, 937 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதனால், தேர்தல் பணிக்கு, 33 சதவீதம் கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டனர். எனவே, மூத்த அலுவலர்களையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம். முன்னர், உதவிப் பேராசிரியர் நிலை வரை, தேர்தல் பணிக்கு எடுத்தோம். இம்முறை, பேராசிரியர் நிலையில் உள்ளவர்களையும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X