என்ன மாஸ்டர், இவ்ளோ சீக்ரமா வெளிய கெளம்பிட்டு இருக்கீங்க?
நல்லா கேட்ட, போ. டேய், இன்னிக்கு என்ன தேதி? ஓட்டு போட வேணாமா.. அதுக்குதாண்டா ரெடி ஆய்ட்டு இருக்கேன்...
ஓ, வெயிலுக்கு முன்னாடி போட்டுட்டு வந்துரலாம்னா...?
வெயிலையே காணோம். டேய், நம்ம ஓட்ட வேற யாரும் போட்ற கூடாதுல்ல. அதுக்கு தான் சீக்ரமா கெளம்புனேன்.
உங்க ஓட்ட இன்னொருத்தன் போட்ருவானா, மாஸ்டர்... போட்டா என்னா ஆவும்னு எல்லாருக்கும் காமிச்சிட்டீங்கல்ல?
அது வேற இது வேற. நம்மூர்ல மாஸ்டருக்கு மாஸ்டர்லாம் இருக்காங்கடா. ரிஸ்கே வேணாம். போ, நீயும் போயி முதல்ல ஓட்டு போட்டுட்டு வா. அப்றம் சாவகாசமா உக்காந்து பேசுவோம்.
யாருக்கு ஓட்டு போடுவீங்க மாஸ்டர்?
இனிமேதாண்டா முடிவு பண்ணனும். யார்லாம் நிக்கிறாங்கனு பூத் வாசல்ல ஒட்டிருப்பாங்கல்ல. அத பாத்து முடிவு பண்லாம்னு இருக்கேன்.
காமெடி பண்றீங்க, மாஸ்டர். யாருக்கு போடுறதுனு இன்னும் முடிவு பண்லயாம்ல்ல. சொல்ல விருப்பம் இல்லைனா, மாட்டேன்னு சொல்லுங்க. காதுல பூ வெக்கிற வேலைலாம் வேணாம்.
பார்றா, என் செல்ல அல்லக்கைக்கு என்னமா கோபம் வருது. டேய், நெசமாவே இன்னும் முடிவு பண்லடா. நீ யாருக்கு போடுவ?னு நா கேக்க மாட்டேன்.
உங்களாண்ட கேட்டு, அதே மாதிரி போடுவோம்னு வந்தேன். நீங்க வழக்கம் போல கலாய்க்கிறீங்க.
நம்பாட்டி போடா. யாருக்கு ஓட்டு போட கூடாதுங்றதுல மட்டும், தெளிவா இருக்கேண்டா.
அதயாச்சும் சொல்லுங்க, கேட்டுக்கிறேன்.
தேவையே இல்லாம அடுத்தவங்க மேட்டர்ல தலையிடுறவங்களுக்கு போட மாட்டேன்.
அதாவது...?
விளக்கமா சொல்லுங்றியா? சொல்லிருவோம். எஞ்சாய் எஞ்சாமி...
அய்யோ, போதும் மாஸ்டர். யார பாத்தாலும் அத பத்தியே பேசி பேசி டர்ர்ராகி கிடக்கேன்.
குறுக்க பேசாம கேளுடா. எஞ்சாமிய நா எஞ்சாய் பண்றேன். அதே மாதிரி உங்சாமிய நீ எஞ்சாய் பண்ணு. ஒரு சாமியவும் நம்பலியா, ரொம்ப நல்லது. எஞ்சாமி உஞ்சாமி அவஞ்சாமி எதையுமே கண்டுக்காம போய்ட்டே இரு. அத வுட்டுட்டு எவஞ்சாமிய பத்தியும் எதுனா சொன்னே... உனக்கு ஓட்டு போட மாட்டேன்.
சூப்பர். இப்ப புரியுது, மாஸ்டர். அடுத்து?
என் தொழில நா பாக்குறேன். அத எப்டி நடத்தணும்னு எனக்கு தெரியும். இல்ல இல்ல, நாங்க சொல்றா மாதிரிதான் நடத்தணும்; எங்க சரக்கதான் வாங்கணும்; எங்க டெக்னாலஜியதான் யூஸ் பண்ணனும்னு ப்ரஷர் குடுத்தே... மவனே, உனக்கு ஓட்டு போடமாட்டேன்.
இதும் நல்லா புரியுது. அப்பால, சொல்லுங்க மாஸ்டர்?
ஓட்டல்ல சாப்டியா, மரியாதயா பில்லுக்கு பணம் குடு. ஆட்டோல சவாரி போனியா, கரெக்டா அவருக்கு பணம் குடு. பஸ்ல ஏறுனியா, கண்டக்டர் கேட்ட காச குடுத்து ஒழுங்கா டிக்கெட் வாங்கு. டாய், நா யார் தெரியுமா...?னு சவுண்டு விட்டேன்னு வச்சுக்க, சத்தியமா உன் கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்.
பிரியாணி சாப்டியா, அண்டாவ லவட்டிகினு அம்பேல் ஆகாத... கரெக்டா, மாஸ்டர்?
குடிச்சுட்டு வண்டி ஓட்னியா? குட்டிகளுக்கு பால் குடுக்ற நாய கல்லால அடிச்சு கொன்னியா? ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர் கேட்டார்னா மரியாதயா பதில் சொல்லு. உன்ன தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்தலைன்னா எம் பேர மாத்திக்கிறேன்..னுபோலீசையே மெரட்டாத. உனக்கு ஓட்டு போட மாட்டேன்.
ஆ, அந்த மேட்டரா... எங்கூட்ல கூட தங்கச்சி சொல்லுச்சு, மாஸ்டர்...
உன் தங்கச்சி என்னடா படிக்கிறா?
பிளஸ் டூ முடிச்சுட்டா, இப்ப ஆஸ்பிடல்ல டிரெய்னிங் போய்ட்டு இருக்கா, மாஸ்டர்.
இந்த மாதிரி எல்லா லேடீசும் தொல்லைகள் தொந்தரவுகள் இல்லாம வேலைக்கு போய்ட்டு பத்திரமா வீட்டுக்கு வரணும். தெருவுக்கு தெரு ரவுடி பசங்க நின்னுகிட்டு பாட்டு பாட்றது, ராகிங் பண்றதுனு நடந்தா... அவங்க கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்.
செம.
பாவப்பட்ட ஜனங்களோட வீடு, கோவில் நிலம், தனியா வாழ்ற வயசான பெற்றோர் சொத்துபத்து எல்லாத்தையும் ஆட்டய போட நெனக்கிற கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்.
ஆகா.
கருத்து சொல்ல உனக்கு இருக்ற அதே சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு. உனக்கு பிடிக்காத கருத்த சொன்னா அவன அடிக்க ஆள் அனுப்புறது, அவன் வீட்ட உடைக்க ஆட்டோ அனுப்றது மாதிரியான ரவுடியிசம் செஞ்சா அந்த கட்சிக்கு ஓட்டு போட மாட்டேன்.
வேனுக்கு தீய வச்சு கொளுத்தினா?
எல்லா வகையான அராஜகமும் ஒழியணும்டா. மக்கள் நிம்மதியா வாழணும். சட்டத்த தவிர வேற எதுக்கும் யாருக்கும் பயப்பட கூடாது. அதுக்கு நேர் மாறா யோசிக்கிற கட்சிக்கு ஓட்டு போட கூடாது.
அப்ப, வலிமையான ஆட்சி வேணாமா, மாஸ்டர்?
வேண்டவே வேண்டாம். இங்க என்ன, போரா நடக்குது? தமிழ்நாட்டு மேல யாராவது படை எடுத்து வாராங்களா? நல்ல ஆட்சி போதும்டா. ரொம்ப பலம் இருந்தா ஆணவம் வந்துரும். அதுவே அடக்குமுறைக்கு கொண்டு விடும். ஜனங்க கஷ்டப்படணும். சிம்பிள் மெஜாரிட்டியோட ஒரு நல்ல அரசு. பரவலா எல்லா கட்சிகளும் இருக்ற மாதிரி எதிர்க்கட்சி வரிசை. இதாண்டா என்னோட ஆசை.
உங்க ஆசை நல்லா இருக்கு. ஆனா பலிக்குமா, மாஸ்டர்?
நல்லது நடக்க ஆசைப்படு. நல்லதே நிச்சயமா நடக்கும்.
ஒருவேளை சூது நடந்தா?
தர்மம் மறுபடியும் வெல்லும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE