மதுராந்தகம் : மதுராந்தகம் தனி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க., இரு கட்சி வேட்பாளர்களும், ஒரே இடத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது, தொண்டர்கள் இடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மதுராந்தகம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் மரகதம், தி.மு.க., கூட்டணி சார்பில், ம.தி.மு.க.,வைச் சேர்ந்த சத்யா போட்டியிடுகின்றனர். இறுதிக்கட்ட பிரசார நாளான நேற்று, மாலை, 6:00 மணிக்கு, மதுராந்தகம் பஸ் நிறுத்தம் எதிரே, சாலையின் ஒரு புறத்தில், வேனில் நின்று, சத்யா பிரசாரம் செய்தார்.அப்போது, அ.தி.மு.க., வேட்பாளர் மரகதம், மதுராந்தகம் வன்னியர் தெருவில் இருந்து, தேரடி தெருவிற்கு, பிரசார வேனில், ஓட்டு சேகரித்தபடி சென்றார். அ.தி.மு.க., வேட்பாளர் பிரசார வாகனத்திற்கு, தி.மு.க., தொண்டர்களின் கூட்டத்தின் நடுவே வழி ஏற்படுத்த, போலீசார் சிரமத்துக்குள்ளாகினர்.
அ.தி.மு.க., வேட்பாளரின் வாகனம் மற்றும் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள், சாலையில் செல்ல, குறுகிய வழி மட்டுமே இருந்ததால், அங்கே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சத்தமிட்டனர்; கட்சி கொடிகளை துாக்கி காட்டி கோஷமிட்டனர்.மதுராந்தகம் காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் ஆசுவாசப்படுத்த முயன்றும், ஒரு கட்டத்தில், இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு கட்சிகளிலும், 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இருந்ததால், சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க., வேன் அங்கிருந்து புறப்பட்டதும், பிரச்னை எதுவுமில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE