சென்னை, : -''வேளச்சேரி தொகுதியில் ஏற்படும், வெள்ள பாதிப்பை தடுக்க, வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்,'' என, காங்., வேட்பாளர் ஹசன் மவுலானா கூறினார்.
வேளச்சேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா போட்டியிடுகிறார். நேற்று, திருவான்மியூர், தரமணி, இந்திரா நகர், சாஸ்திரி நகர் போன்ற பகுதியில் பிரசாரம் செய்தார்.திருவான்மியூர் மார்க்கெட் செல்லும்போது, அங்குள்ள வியாபாரிகள், மழை நீர் தேக்கம், கட்டடம் விரிசல் போன்ற பிரச்னைகள் கூறினர். அவர்களிடம், ''நான் வெற்றி பெற்றதும், உங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர தேவையான நடவடிக்கை எடுப்பேன்,'' எனக் கூறினார்.
மேலும், தொகுதி வாக்குறுதி அடங்கிய துண்டு பிரசுரம் வீடு வீடாக வழங்கப்பட்டது.அதில், 'அடையாறு ஆற்றை ஒட்டி வசிப்போர் பாதுகாப்பு கருதி, தடுப்பு சுவர் கட்டப்படும்; ஆட்சேபனை இல்லா குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கப்படும்; வெள்ள பாதிப்பை தடுக்க, வெள்ள மேலாண்மை குழு அமைக்கப்படும்' உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து, ஹசன் மவுலானா கூறியதாவது: தொகுதி முழுதும் சுற்றியபோது, பொதுமக்கள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பல்வேறு பிரச்னைகள் கூறினர். அதை, குறிப்பெடுத்து வைத்துள்ளேன். எம்.எல்.ஏ., ஆனதும், தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பேன். வேளச்சேரி, வெள்ள பாதிப்பை தடுக்க, வெள்ள மேலாண்மை குழு அமைப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE