திருவொற்றியூர் : திருவொற்றியூர், சார்லஸ் நகரில், அ.தி.மு.க.,வினர் சிலர், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தி.மு.க.,வினர் அங்கு குவிந்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில், தி.மு.க.,வைச் சேர்ந்த நால்வருக்கு காயம் ஏற்பட்டது. இதனிடையே, தி.மு.க., வினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி, தி.மு.க., வேட்பாளர் உட்பட, 500 க்கும் மேற்பட்டோர், திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவொற்றியூரில் நேற்று, தி.மு.க.,வினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, அ.தி.மு.க., வட்ட செயலர் கண்ணன், 51, யுவராஜ், 21, ரஞ்சித், 32, இளையவாணன், 25,கோபி, 42, ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர். இதே போல், மயிலாப்பூர், நொச்சி நகரில் நேற்று முன்தினம் இரவு, அ.தி.மு.க., தொண்டர்கள், ஐந்து பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த, தி.மு.க.,வினர், திடீரென பணம் பட்டுவாடா செய்கிறீர்கள் என குற்றம் சாட்டியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, கைகலப்பாக மாறியது. இதில், ஐந்து பேர் காயமடைந்தனர். இரு கட்சியினரும் பரபஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளனர். வட்டச் செயலர் கார் உடைப்புமுதல்வர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட முன்விரோதத்தில், அ.தி.மு.க., வட்ட செயலர் காரை உடைத்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இரு தினங்களுக்குமுன், முதல்வர் இ.பி.எஸ்., வேளச்சேரியில் பிரசாரம் செய்தார். மேடையில், நிற்க வேண்டியவர்கள் குறித்து, ஏற்கனவே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள், மட்டும் நிறுத்தப்பட்டனர். கடந்த மாதம், வேளச்சேரி பகுதி செயலர் பதவியில் இருந்த நீக்கப்பட்ட மூர்த்தி, மேடை ஏற முயன்றார். போலீசாரும், கட்சி நிர்வாகிகளும் தடுத்தனர். இதில், வேட்பாளர் அசோக் மற்றும் மூர்த்தி தரப்பினர் இடையே மோதல் நிலவியது. அசோக் தரப்பைச் சேர்ந்த, 178 வது வார்டு வட்ட செயலர் கலைச்செல்வன், வேளச்சேரி, திருவீதி அம்மன் கோவில் தெருவில் வசிக்கிறார். நேற்றுமுன்தினம், இவரது கார் உடைக்கப்பட்டது. வேளச்சேரி போலீசார், கேமராக்களை ஆய்வு செய்தபோது, மூர்த்தி ஆதரவாளர்களான ஆறுமுகம், 35, துரைபாண்டி, 34, என தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE