வேட்பாளர்கள் வருகையால் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர்கள் வருகையால்

Added : ஏப் 05, 2021
Share
பழவேற்காடு : அடுத்தடுத்து வேட்பாளர்கள் வருகை புரிந்ததால், மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்த நிலையில், பழவேற்காடில் மீன்கள் கிடைக்காமல், மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். பழவேற்காடு மீனவப் பகுதிகளில், மூன்று நாட்களாக வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 1ம் தேதி அன்று, காங்கிரஸ் வேட்பாளர்

பழவேற்காடு : அடுத்தடுத்து வேட்பாளர்கள் வருகை புரிந்ததால், மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் தங்களது பகுதியில் உள்ள குறைகளை தெரிவித்த நிலையில், பழவேற்காடில் மீன்கள் கிடைக்காமல், மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

பழவேற்காடு மீனவப் பகுதிகளில், மூன்று நாட்களாக வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த, 1ம் தேதி அன்று, காங்கிரஸ் வேட்பாளர் துரைசந்திரசேகர், ஒவ்வொரு மீனவ கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தார்.அடுத்த, இரண்டு நாட்கள், அ.தி.மு.க., வேட்பாளர் பலராமன், மீனவ கிராம நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். வேட்பாளர்கள் வருகையை ஒட்டி, மீனவர்கள், மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர்.

ஓட்டு கேட்டு வந்த வேட்பாளர்களிடம், பழவேற்காடில் கிடப்பில் போடப்பட்ட துாண்டில் வளைவுடன் கூடிய முகத்துவாரம் திட்டம், துறைமுக விரிவாக்கத்தால் ஏற்படும் பாதிப்பு, வேலைவாய்ப்பு, குடிநீர் பிரச்னைகள் குறித்து தெரிவித்தனர்.மீனவர்கள் தொழிலுக்கு செல்லாததால், பழவேற்காடில், மூன்று நாட்களாக மீன்கள் கிடைக்கவில்லை. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமையான, நேற்று, பல்வேறு பகுதிகளில் இருந்து, மீன் வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து மீனவர்கள் தெரிவித்ததாவது: வேட்பாளர்கள் வரும்போது, அனைத்து மீனவர்கள் கூட்டம் போடப்படும். அங்கு வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை தருவர். நாங்களும் எங்கள் பகுதியில் தீர்க்கப்படாத, தீர்க்க வேண்டிய பிரச்னைகள் குறித்து தெரிவிப்போம். வேட்பாளர்கள் வருகையால் யாரும் தொழிலுக்கு செல்லவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X