சென்னை: தமிழகத்தில் ‛சி விஜில்' செயலி மூலமாக கரூர் தொகுதியில் அதிகளவு தேர்தல் விதி மீறல் புகார்கள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நாளை (ஏப்.,6) நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் 4,17,521 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபாட் இயந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.

தமிழகத்தில் ரூ.428.46 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் வழங்கப்படும். பூத் சிலிப்கள் இல்லை என்றாலும் பெயர் இருந்தால் உரிய ஆவணங்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கலாம். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேகமான பூத் சிலிப்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். ‛சி விஜில்' செயலி மூலமாக கரூர் தொகுதியில் அதிகளவு தேர்தல் விதி மீறல் புகார் வந்துள்ளது. பணப்பட்டுவாடா குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE