கண், காதுகளை மூடிக்கொள்ளட்டும்!
பி.என்.கபாலி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ -- மெயில்' கடிதம்: தேர்தல் கமிஷன் எவ்வளவு முயன்றாலும், ஓட்டிற்கு பணம் வினியோகிப்பதை தடுக்க முடியவில்லை. இரு திராவிட கட்சிகளும், ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளன. தொகை எவ்வளவு என்பதில் தான் வேறுபாடு இருக்கிறது.
பண வினியோகம், தங்கு தடையின்றி முடிந்து விட்டது. பறக்கும் படையினரின் நேரமும், சக்தியையும் வீணாகி விட்டது. அடுத்த தேர்தலில், இந்த பறக்கும் படை கலாசாரத்தை நிறுத்தி விடலாம்.ஓட்டுக்கு பணம் கொடுப்போருக்கும், பெறுவோருக்கும் குற்ற உணர்வு இல்லை.வாங்குபவர்களுக்கும் நம்மிடம் இருந்து கொள்ளையடித்ததை தானே தருகின்றனர் என்ற எண்ணத்தால், எந்த கூச்சமும் இல்லை. சொல்லப் போனால், அதை தடுக்கும், தேர்தல் அதிகாரியை தான், விரோதி போல் பார்க்கின்றனர்.
பண வினியோகத்தின் மூலம், அரசியல்வாதிகள் கொள்ளையடித்து பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் வெளியே வரட்டுமே என, அப்பாவி மக்கள் நினைக்கின்றனர். ஓட்டுக்கு பணம் வினியோகித்த வேட்பாளர் தோற்றால், நாட்டிற்கு நல்லது. அவ்வகையில், ஊழல் அரசியல்வாதியை முட்டாளாக்கலாம்.இதே போல், வேட்பாளர் செய்யும் தேர்தல் செலவுக்கு விதிக்கப்பட்ட வரம்பையும், பல மடங்கு உயர்த்த வேண்டும். அதன் மூலமும், கறுப்பு பணம் வெளியே வரும். தேர்தல் திருவிழாவால், எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன!அதிகாரப்பூர்வமாக, தேர்தல் கமிஷன் ஏதும் செய்ய முடியாவிட்டாலும், கண், காதுகளை மூடிக் கொள்ளலாமே!
யாரிடமும் சொல்லாதீர்!
சி.கலாதம்பி, பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்று, சட்டசபை தேர்தல். தமிழகத்தின், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கான தலையெழுத்தை, நாம் இன்று தீர்மானிக்கப் போகிறோம்.'எண்ணித் துணிக கருமம்' என்ற வள்ளுவனின் வாக்கை, நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். தி.மு.க., - அ.தி.மு.க., என, இரு திராவிட கட்சிகளின் ஆட்சியையும், நாம் பார்த்து இருக்கிறோம். அதில், எது நல்ல, அமைதியான ஆட்சியை வழங்கியது என,
பரிசீலியுங்கள்.இரண்டும் பிடிக்கவில்லையா... மூன்றாவது அணி என்ற வகையில், நாம் தமிழர், அ.ம.மு.க., மற்றும் ம.நீ.ம., கட்சிகள் தனித்தனியே களமிறங்கி உள்ளன.ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் உள்ளன. அக்கட்சிகளில், ஏது சிறந்ததோ, அதற்கு ஓட்டு அளியுங்கள். உங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரில் நல்லவர் யார் என, உங்கள் மனதிற்கு தோன்றுகிறதோ, அவரை ஆதரியுங்கள்.ஆனால், கண்டிப்பாக, ஓட்டுப் போடுங்கள். 'வெயில் அதிகமாக இருக்கிறது; நான் ஓட்டு போடாவிட்டால், அரசியலில் மாற்றமா ஏற்படப் போகிறது' என, காரணம் சொல்லாதீர்.
நண்பர், குடும்ப உறுப்பினர் என, அனைவரும் சொல்லும் கருத்துக்களையும் கேளுங்கள்; பரிசீலியுங்கள். ஆனால் உங்களுக்கு எது சரி எனத் தோன்றுகிறதோ, அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள்.யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை, ஒருபோதும் சொல்லாதீர்; அது, ரகசியமானது. அரசியல்வாதிகளுக்காக, நம் நண்பர், உறவினர்களை பகைத்துக் கொள்ளாதீர். நம் பிரச்னைக்கு, எந்த அரசியல்வாதியும் தீர்வு காண மாட்டார். நம் நண்பர்களும், உறவினர்களும், அக்கம் பக்கத்தினருமே வந்து நிற்பர்.தேர்தல் திருவிழா முடிந்து விட்டது. நம் வழக்கமான வாழ்க்கைக்கு, மகிழ்ச்சியுடன் திரும்புங்கள்.
அதிகாரம் உங்களைகெடுக்கும்!
க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தேர்தல் விதிமுறை மீறியதாக, ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்ட பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தேர்தலின் போதும், இதுபோன்று நடப்பது வழக்கம்.அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் ஆகின்றன; ஆனால், அவற்றின் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கை என்னவென்று தெரிவதே இல்லை.தமிழகத்தின் மொத்த வேட்பாளர்கள், 3,559 பேரில், 652 பேர் கோடீஸ்வரர்கள் இரு திராவிடக் கட்சிகளிலும், 60 சதவீதத்திற்கு மேல், பழைய, எம்.எல்.ஏ.,க்களே, மீண்டும் போட்டியிட்டு உள்ளனர். ஏனெனில், அவர்கள் தான் பணத்தை தண்ணீராய் செலவழிக்க முடியும் என்பதால் தான்.இது தவிர, வேட்பாளர்களில், 400 பேர், குற்றப்பின்னணி உடையோர். அவர்கள், அதிகாரத்திற்கு வந்தால், என்னவெல்லாம் செய்வரோ?நம் நாடு விடுதலை பெற்ற தினத்தன்று, கோல்கட்டாவில் உள்ள, 'மன்சில்' என்ற மாளிகையில் தங்கி இருந்த காந்தியடிகளை, மரியாதை நிமித்தமாக சந்திக்க, மேற்குவங்க காங்கிரஸ் நிர்வாகிகள் சென்று இருந்தனர்.அவர்களிடம், 'இன்று முதல் நீங்கள் முள் கிரீடத்தை அணிய வேண்டி இருக்கும். 'அடக்கத்துடனும், பொறுமையுடனும் பணிஆற்றுங்கள். அதிகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்; இல்லாவிட்டால், அதிகாரம் உங்களை கெடுத்து விடும்' என, காந்தி கூறினார்.எவ்வளவு ஆழமான கருத்து. எக்காலத்திற்கும் பொருந்தும், அந்த கருத்தை, நம் அரசியல்வாதிகள் உணர வேண்டும்.காந்தி எழுதிய கட்டுரை ஒன்றில், 'ஒருவர் எந்த கொள்கை உடையவராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், நம் தேசத்தின் கவுரவத்தை காப்பவராக இருக்க வேண்டும். மோசமான ஆட்சி முறையும், ஊழலும் எப்போதும் கைகோர்த்து நடக்கும் தன்மை கொண்டவை.
'அவை இரண்டும் செழித்து வளர்ந்தால், நாட்டின் கவுரவத்தைக் காப்பாற்ற முடியாது. நம் நாட்டைப் பற்றி சிந்திக்காமல், சுய நலமாக இருக்கக் கூடாது' என்று, எழுதியுள்ள அவர், 'ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கலாமா?' எனவும் தெரிவித்திருந்தார்.எனவே, மே, 2, ஆட்சிக்கட்டிலில் யார் அமர்வார் என்பது, தெரிந்து விடும். அவர், அதிகார போதைஇன்றி, மிக கவனமாக இருக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE