அதிகாலையே பெஞ்சில் ஆஜரான அண்ணாச்சி, ''என்ன நாயரே... ஓட்டு போட கேரளாவுக்கு போகலையா வே...'' என விசாரித்தார்.
''இந்த ஊருல தான் நம்ம பிழைப்புன்னு ஆயிடுச்சே... அதனால, ஓட்டை இங்க மாத்திட்டேன் அண்ணாச்சி... 7:00 மணிக்கு முதல் ஆளா போய் ஓட்டு போடணும்...''
என்றார் நாயர்.
''சபாஷ் நாயரே...'' என்ற அன்வர்பாய், ''உறவினர்கள் தயவுல, ஜெயிச்சிடுறாரு பா...'' என, விஷயத்தை ஆரம்பித்தார்.
''யாரை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தொகுதியில, தி.மு.க., வேட்பாளர் தங்கம் தென்னரசை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகமும், அ.ம.மு.க.,வும் போட்டியிடுது...
''கடந்த, 2011 தேர்தல்லயும், அ.தி.மு.க., கூட்டணியில, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் போட்டியிட்டதால, தங்கம் தென்னரசு ஈசியா ஜெயிச்சிட்டாரு பா...
''அடுத்து, 2016 தேர்தல்ல, அ.தி.மு.க.,வுல, பலமான வேட்பாளரை நிறுத்தாததால, தங்கம் தென்னரசு ஜெயிச்சிட்டாரு... அ.தி.மு.க.,வுல இருக்கிற சில அமைச்சர்களும், தங்கம் தென்னரசு குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களாம்... அதனால தான், திருச்சுழி தொகுதியில டம்மி வேட்பாளர் அல்லது சின்ன கூட்டணி கட்சிகளுக்கு தள்ளி விட்டுட்டாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.
''பணி நீட்டிப்பு தராம, இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எந்த துறையில, யாருக்குபா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., கட்டுப்பாட்டுல, சாத்தாங்காடு இரும்பு விற்பனை வளாகம் இருக்கு... இதை நிர்வகிக்க, வருவாய் துறையில இருந்து ஒரு டி.ஆர்.ஓ.,வை, 'டெபுடேஷன்'ல போடுவா ஓய்...
''இப்ப, ஜானகின்னு ஒரு டி.ஆர்.ஓ., தலைமை நிர்வாக அதிகாரியா இருக்கா... இவங்க பணிக்காலம், எட்டு மாதம் முன்னாடியே முடிஞ்சுடுத்து ஓய்...
''இவங்களுக்கு பணி நீட்டிப்பு கேட்ட பைல், வீட்டுவசதி துறை உயர் அதிகாரிகளுக்கு போச்சு... ஆனா, உயர் அதிகாரிகள், பைலை ஓரமா துாக்கி வச்சுட்டா ஓய்... அதே நேரம், இதே துறையில, கூடுதல் செயலருக்கு முன்தேதி போட்டு பணி நீட்டிப்பு குடுத்திருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''சுளையா பணத்தை வாங்கிட்டு, வாகனங்களை விடுவிச்சிருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், அண்ணாச்சி.
''எந்த ஊர் போலீசை சொல்றீர் ஓய்...'' என, பட்டென கேட்டார், குப்பண்ணா.
''திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பக்கத்துல, முருகப்பட்டிங்கிற இடத்துல, சிலர் மண் அள்ளுறதா, போலீசுக்கு தகவல் போயிருக்கு... அங்க போன போலீஸ் அதிகாரி, ஜே.சி.பி., டிப்பர் உள்ளிட்ட வாகனங்களை பிடிச்சாருவே...
''விசாரிச்சதுல, பட்டா இடத்துல, ஒருத்தர் தன் சொந்த பயன்பாட்டுக்கு மண் எடுத்தது தெரிஞ்சது... ஆனாலும், போலீஸ் அதிகாரி, '1 லட்சம் ரூபாய் குடுத்தா தான், வாகனங்களை விடுவிப்பேன்'னு அடம் பிடிச்சிருக்கார்... கடைசியா, 75 ஆயிரம் ரூபாயை வாங்கிட்டு தான், போயிருக்காரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''வாங்க கலைச்செல்வன்... மணி, 7:00 ஆயிடுச்சு... ஓட்டு போட்டுட்டு, வீட்டுக்கு போயிடலாம் பா...'' என, நண்பரை அழைத்தபடியே அன்வர்பாய் நடக்க, பெரியவர்கள் பின்தொடர்ந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE