வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு, ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சியினரிடம் புகுந்து விளையாடும் ரூபாய் நோட்டுக்கத்தைகளை காணும் அப்பாவி வாக்காளர்கள், கேட்கும் ஒரே கேள்வி, 'எங்கே இருந்தது இத்தனை பணம்' என்பது தான்!முந்தைய தேர்தல்களில் இல்லாத பல சிறப்புகள், இந்த தேர்தலில் கோவைக்கு வந்து விட்டன. அரசியல் கட்சியின் தலைவர் ஒருவர் கோவையில், நேரடியாக தேர்தல் களம் இறங்கியது இந்த தேர்தலில் தான்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக எழுந்த புகாரில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், ஐ.ஜி., எஸ்.பி., மாற்றப்பட்டதும் இந்த தேர்தலில் தான்.பிரதமர் மோடியில் தொடங்கி, காங்., தலைவர் ராகுல், முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல் வெவ்வேறு அரசியல் கட்சியினரும், கோவையில் முகாமிட்டதும் இந்த தேர்தலில் தான்.
இப்படி பல விதங்களிலும், அனலையும், ஆர்வத்தையும் கிளப்பிய தேர்தல், இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. தேர்தல் பிரசாரம் முடிந்து விட்டது.இப்போது கோவையில் ஓரிரு நாட்களாக, நகரம், கிராமம் என வேறுபாடுகள் எதுவும் இன்றி வாக்காளர் அனைவரும் அக்கம் பக்கத்தினரிடம்கேட்கும் ஒரே கேள்வி, 'உங்க வீட்டுக்கு வந்துச்சா' என்பது தான்.'எல்லோருக்கும் கொடுத்து விட்டு, நமக்கு மட்டும் தராமல் சென்று விட்டார்களோ' என்று தவிக்கும் அப்பாவி ஏழை மனம், அப்படி பலரையும் விசாரிக்க வைக்கிறது.'ஓட்டுக்கு பணம் தருவது தவறு' என்று தெரிந்தாலும், அரசியல் கட்சியினர் துணிந்து அந்த தவறை செய்கின்றனர்.
'அவர்களே துணிந்து செய்யும்போது நமக்கென்ன' என்று, வாக்காளர்களும் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கின்றனர்.வாக்காளர் பட்டியல், பணத்தாள்களுடன் கட்சியினர் பிடிபடும் சம்பவங்கள் கூட நடக்கின்றன. குறைந்தபட்சம், 500 முதல் அதிகபட்சம் 1000 ரூபாய் வரை, வினியோகம் நடப்பதாக, வாங்கியவர்கள் கூறுகின்றனர்.பணம் வினியோகிப்பவர்களில் பெரும் பகுதியினர், பெண்கள். வீடியோக்களிலும், பிற கட்சியினரிடமும் சிக்கிக்கொள்வோர் சிலர்; சிக்காதவர்கள் பலர்.கணக்கு வழக்கு எதுவும் இன்றி, கட்சிக்காரர்கள் ஓட்டுக்கு பணம் வினியோகிப்பதை பார்க்கும் அப்பாவி பொதுமக்கள் பலரும் எழுப்பும் கேள்வி, 'இத்தனை நாளா இந்தப்பணம் எல்லாம் எங்கே இருந்தது, எப்படி இவர்களிடம் வந்தது' என்பது தான்.
இத்தனை பணமும், எப்படி கட்சியினரிடம் வந்தது, பறக்கும் படையை தாண்டி வந்ததா, முன்கூட்டியே பதுக்கப்பட்டதா, ஏ.டி.எம்., வாகனத்தில் வந்ததா, போலீஸ் வாகனத்தில் வந்ததா என ஆயிரமாயிரம் கேள்விகள், அப்பாவி வாக்காளர் மனதில் எழுகின்றன.ஓட்டுக்கு தரப்படும் லஞ்சம், நம் வரிப்பணமே அல்லது நம் வரிப்பணத்தில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் தரப்படும் பணமே என்பதை உணர்ந்து, நேர்மையான வேட்பாளரை தேர்வு செய்து ஓட்டளிப்பதே, நாட்டுக்கு நல்லது; அவரவர் வீட்டுக்கும் நல்லது.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE