கூடலுார்:கூடலுார் அருகே, குடியிருப்புகுள் காட்டு யானைகள் வருவதை தடுக்க, பலா காய்களை அகற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.கூடலுார் பகுதியில், மண்வயல், அருகே உள்ள ஓடகொல்லி பழங்குடி கிராமத்துக்கு, பலா காய்களை தேடி, முதுமலையிலிருந்து காட்டுயானைகள் அகழியை கடந்து வருவது அதிகரித்துள்ளது. இதனால், மனித- யானை மோதல் வர வாய்ப்புள்ளது. இதனை தடுக்க, அப்பகுதியில், மரங்களில் உள்ள பலா காய்களை வனத்துறையினர் அகற்றி வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,'இப்பகுதியில் பலாக்காய் சீசன் துவங்கியுள்ளதால், உணவுக்காக அதனை தேடி காட்டு யானைகள் வருகை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஓடகொல்லி பகுதியில் குடியிருப்பு அருகே மரங்களிலுருந்து பலாகாய்கள் அகற்றி வருகிறோம். இதே போன்று, பொதுமக்களும் குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள பலா காய்களை அகற்றி வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்,' என்றனர்.பொது மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் அகழியை தாண்டி அதிகளவில் யானைகள் வருகின்றன. சேதமான அகழிகளை சீரமைக்க வேண்டும். மேலும், கோடை காலம் முடியும் வரை, யானைகளை கண்காணித்து விரட்ட, 24 மணிநேரமும் வனத்துறை குழுவை இப்பகுதியில் பணியமர்த்த வேண்டும். காட்டு யானைகள் அதிகளவில் வரும் பட்சத்தில், கும்கிகளை கொண்டு வந்து, யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE