புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைய துவங்கி இருப்பதை அடுத்து, மஹாராஷ்டிரா, பஞ்சாப், டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டதும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கடந்த ஆண்டு மார்ச்சில் மூடப்பட்டன. பல மாதங்களாக, 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கல்வி பயின்று வந்தனர். தொற்று பரவல் குறையத் துவங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு அக்., முதல், படிப்படியாக பள்ளிகள் செயல்படத் துவங்கின.
ஒரு சில மாநிலங்களில், 1 முதல் 12ம் வகுப்பு வரையிலும், சில மாநிலங்களில், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.இந்நிலையில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை, இரண்டு வாரங்களாக தீவிரமடைந்துள்ளது. முன் எப்போதும்
இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.
மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், தொற்று பரவல் தீவிரமாக உள்ளன. இதையடுத்து, மஹாராஷ்டிராவில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை தவிர, அனைத்து வகுப்புகளுக்கும் காலவரையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபில், வரும், 10ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில், மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இவை தவிர, உத்தர பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும், பள்ளிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன.
கொரோனா பரவல் துவங்கியது முதல், இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக, ஒரே நாளில், ஒரு லட்சத்து, 3,558 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:புதிய கொரோனா பாதிப்புகளை கண்டறிய, கடந்த, 24 மணி நேரத்தில், 8.94 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன் முடிவில், ஒரு லட்சத்து, 3,558 பேரிடம், வைரஸ் பாதிப்பு உறுதியானது. கொரோனா பரவல் துவங்கியது முதல், ஒருநாள் பாதிப்பில், இதுவே அதிகபட்சம்.
தமிழகம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா உட்பட எட்டு மாநிலங்களில், புதிய பாதிப்புகள் அதிகம் உறுதி செய்யப்படுகின்றன. நேற்று ஒரே நாளில் பதிவான புதிய பாதிப்புகளில், 81.90 சதவீதம் பேர், இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள்.இதில், மஹாராஷ்டிராவின் பங்கு மிக அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும், 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுஉள்ளனர். புதிதாக பாதிக்கப்பட்டவர்களுடன், இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 25 லட்சத்து, 89 ஆயிரத்து, 067 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கோடியே, 16 லட்சத்து, 82 ஆயிரத்து, 136 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். மீட்பு விகிதம், 92.80 சதவீதமாக உள்ளது.
புதிய பாதிப்புகள் அதிகரிப்பதால், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, 7.41 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த, 24 மணி நேரத்தில், 478 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 222 பேர் இறந்துள்ளனர். பஞ்சாபில், 51; சத்தீஸ்கரில், 36; உத்தர பிரதேசத்தில், 31; கர்நாடகாவில், 15; குஜராத் மற்றும் தமிழகத்தில் தலா, 14; மத்திய பிரதேசத்தில், 11 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.இவர்களுடன், வைரஸ் பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 101 ஆக உயர்ந்துள்ளது. மாநில வாரியான உயிரிழப்பில், மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில், 55 ஆயிரத்து, 878 பேர் உயிரிழந்து உள்ளனர். அடுத்ததாக, தமிழகத்தின் பலி எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 778 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, நேற்று முன்தினம், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்டமாக, 'வைரஸ் பரவல் நிலை மற்றும் தடுப்பூசிகளை கையாளுதல் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார்' என, அதிகாரிகள் நேற்று கூறினர்.முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், பலமுறை ஆலோசனை நடத்தினார்.
25 நாட்களில் கிடுகிடு
நாட்டில், கடந்தாண்டு செப்., 17ம் தேதி, 97 ஆயிரத்து, 894 பேரிடம் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இதுவே, கடந்த ஆண்டு ஒரே நாளில் பதிவான, அதிகபட்ச பாதிப்பு. ஒரு நாள் பாதிப்பு, 20 ஆயிரத்தில் இருந்து, இந்த உச்சத்தை அடைய, 76 நாட்கள் ஆயின. தற்போது, கடந்த மாதம், 9ம் தேதி, 20 ஆயிரமாக இருந்த தினசரி வைரஸ் பாதிப்பு, 25 நாட்களில் ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE