தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள் தடுப்பூசியை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள் தடுப்பூசியை!

Updated : ஏப் 07, 2021 | Added : ஏப் 05, 2021 | கருத்துகள் (6)
Share
கடந்த, 1998ல், நான்காம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள், பதற்றமும், பயமுமாக, சிறு குழுக்களாக ஆங்காங்கே நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனை நோயாளியிடமிருந்து செவிலியர் ஒருவருக்கு, 'ஹெபடைடிஸ் - பி' எனப்படும் மஞ்சள் காமாலை நோய் தொற்றிக் கொண்டது.அது பற்றி தான், அந்த இளம் மருத்துவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.அந்தக் காலகட்டத்தில் மிக அபாயகரமான நோயாக
Covid Vaccine, Corona Vaccine, Vaccine, தடுப்பூசி

கடந்த, 1998ல், நான்காம் ஆண்டு பயிலும் மருத்துவ மாணவர்கள், பதற்றமும், பயமுமாக, சிறு குழுக்களாக ஆங்காங்கே நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனை நோயாளியிடமிருந்து செவிலியர் ஒருவருக்கு, 'ஹெபடைடிஸ் - பி' எனப்படும் மஞ்சள் காமாலை நோய் தொற்றிக் கொண்டது.

அது பற்றி தான், அந்த இளம் மருத்துவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.அந்தக் காலகட்டத்தில் மிக அபாயகரமான நோயாக பார்க்கப்பட்ட மஞ்சள் காமாலை நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பது தான், அப்போது நடந்த விவாதம்.அப்போது, மஞ்சள் காமாலைக்கு தடுப்பு ஊசி, வெளிநாடுகளில் இருந்து தருவிக்கப்பட்டது. மூன்று தவணை கள் வரை போட வேண்டும்; விலையும் அதிகம். மாணவர்கள் பலருக்கு அது சாத்தியமில்லை. அப்போது தான், 'பாரத் பயோடெக்' நிறுவனம், குறைந்த விலையில் மஞ்சள் காமாலைக்கான தடுப்பூசியை தயாரித்து கொடுத்தது.


'சீரம் இன்ஸ்டிடியூட்'


மருத்துவ உலகிற்கு கிடைத்த மிகப்பெரிய நன்கொடை அது. மருத்துவர்கள் உட்பட பலரும், அப்போது அந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.அதற்குப் பிறகு, பாரத் பயோடெக் நிறுவனம் வெற்றி கரமாக ஆறு தடுப்பூசிகளை தயாரித்துக் கொடுத்து உள்ளது. ஏழாவதாக உருவாக்கியுள்ளது தான் கொரோனாவுக்கான, 'கோவாக்சின்' தடுப்பூசி. விலை இல்லாத, 'டிவி, மிக்சி, கிரைண்டர், சைக்கிள், லேப்டாப்' என்று, அரசு கொடுத்த எல்லா விலையில்லாத பொருட்களுக்கும் மவுசு இருக்கிறது.

ஆனால், இந்த விலையில்லாத தடுப்பூசியை மட்டும், ஏன் சந்தேகத்துடன் பார்க்க வேண்டும்? காரணம், மக்களுக்கு தடுப்பூசி குறித்த சரியான புரிதல் இல்லை. பாரம்பரியம் மிக்க, பாரத் பயோடெக் உருவாக்கிய தடுப்பூசியின் மீது, அரசுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. கொரோனாவின் பல்வேறு மாற்றங்களை தாங்கி, தாக்குப்பிடிக்கக் கூடிய ஒரு தடுப்பூசியாக, கோவாக்சினை மருத்துவ உலகம் பார்க்கிறது.

அதனால் தான், மூன்றாவது நிலை பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் போதே, அனுமதித்தது, நம் இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம்.டாக்டராக இருப்பதால், நோயாளிகளுடன் நெருங்கி பழகுவதால், எனக்கு மத்திய அரசு தந்துள்ள முன்னுரிமை அடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசியை, இரண்டு தவணைகள் எடுத்துக் கொண்டு விட்டேன்; எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. எடுத்துக் கொண்ட முதல் வாரம், பிறகு, இரண்டாம் வாரம் என்று, இரண்டு முறை போன் செய்து, 'ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?' என்று கேட்டனர்.

இரண்டாவது தடுப்பூசிக்கான குறுஞ்செய்தியும் வந்தது. இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும், போன் செய்து, 'ஏதேனும் பிரச்னை இருக்கிறதா?' என்று கேட்டனர்.கொரோனா வந்த புதிதில், நம்மிடம், 'டெஸ்ட்' செய்வதற்கான பரிசோதனை, 'கிட்'டுகள் இல்லை; வெளிநாடுகளிலிருந்து தருவித்தோம். அதிலும் பல, தரமில்லாமல் போகவே திருப்பி அனுப்பினோம். இந்த காலகட்டத்தில், உலக சுகாதார நிறுவனம், 'பரிசோதனை பரிசோதனை' என்று தொண்டை கிழிய கத்திய போதும், நம்மால் துவக்கத்தில், அதிக அளவு பரிசோதனைகளை செய்ய முடியவில்லை.ஆனால், தடுப்பூசி என்று வரும் போது, உலகத்திற்கே தடுப்பூசியை கொடுக்கும் அளவுக்கு, நாம் முன்னணியில் நிற்கிறோம்.

நமக்கு தேவையான அளவு தடுப்பூசி இருப்பு நம்மிடம் உள்ளது. ஏனென்றால் உலகத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் தடுப்பூசி தயாரிக்கக்கூடிய, 'சீரம் இன்ஸ்டிடியூட்' என்ற தொழிற்சாலை, நம் நாட்டில் இருக்கிறது. உலகத் தலைவர்களே புகழும் அளவுக்கு, தடுப்பூசி தயாரிப்பில் நம் நாடு முன்னிலை வகிக்கிறது. எனவே, தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள, நாம் முன்வந்து, தயாரிப்பில் மட்டுமல்ல, உபயோகத்திலும் முன்னணியில் உள்ள நாடு என்று காட்ட வேண்டும்.

ஒரு சிலர், அரசியல் காரணங்களுக்காக, தேர்தலுக்காகத் தான், தடுப்பூசிகள் முன்பே அனுமதிக்கப்பட்டு விட்டன என்று கூறுகின்றனர்; அது தவறு. ஏனெனில், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதன் முடிவுகள், தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்துமே... எனவே, தரமாக, உறுதியாக, பல முறை சோதனை செய்து தான், இந்த தடுப்பூசிகளை வெளியிட்டுள்ளனர் என்பதில், எந்த சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதால், குழந்தை பிறக்காது; தோலில், 'அலர்ஜி' உண்டாகும் என்பது போன்ற ஏராளமான கட்டுக்கதைகள் உலா வருகின்றன; இவை அனைத்துமே பொய்.


முதல்கட்ட பரிசோதனை


இந்த கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நான்கு கோடி தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரை, இந்தியாவில் தடுப்பூசி கொடுக்கப்பட்டவர்களில், 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் சில நாள் நீடித்த காய்ச்சல் அவ்வளவு தான். மற்றபடி, ஊசி போட்ட இடத்தில் லேசான வலி; சிறிதளவு காய்ச்சல் என, எல்லா தடுப்பூசிகளுக்கும் உண்டான குணங்கள் இதற்கும் உண்டு.தடுப்பூசி போட மக்கள் தயங்குவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க, குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகுமே... இந்த ஊசியை, எப்படி ஒரே ஆண்டில் கண்டுபிடித்தனர் என்றும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், அதெல்லாம் சாத்தியம் தான். பல்வேறு வைரஸ் கிருமிகள் குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருப்பதால், தடுப்பூசி கண்டுபிடிப்பது எளிதாகி விட்டது. சொல்லப்போனால், கொரோனாவுக்கான தடுப்பூசிகள், வைரஸ் தாக்கம் ஏற்பட்ட, ஆறே வாரங்களில், அதாவது, பிப்ரவரி மாதமே உருவாக்கப்பட்டு விட்டன. அவற்றை, மனிதர்களுக்கான சோதனையில் முதல், இரண்டாவது, மூன்றாவது கட்டம் கடந்து வருவதற்கு தான், ஒரு ஆண்டு பிடித்தது.

முதல்கட்ட பரிசோதனை தடுப்பூசி செலுத்தப்பட்டு, இப்போது ஒரு ஆண்டு முழுமை அடைந்துள்ள நிலையில், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, எந்த விதமான அதிதீவிர பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இது, நமக்கு கிடைத்திருக்கும் ஒரு நேர்மறை செய்தி. எனவே, தைரியமாக தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளுங்கள்.தடுப்பூசியின் வெற்றி வாய்ப்பு, 70 சதவீதத்திலிருந்து, 80 சதவீதம் வரை உள்ளது. அப்படி என்றால், 100 பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்டால், 80 பேருக்கு இந்த நோய் வராது; 20 பேருக்கு இந்த நோய் வர வாய்ப்புண்டு.


80 சதவீதம் பேர்


அப்படி வந்தாலும், அது தீவிரமாக தாக்குவதில்லை. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு, அவர்களின் நுரையீரல் பாதிக்கப்படுவதில்லை; இறந்து போவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், கட்டாயம் நாம் தடுப்பூசியை எடுத்துக் கொள்வது நல்லது.அதோடு, தடுப்பூசி எடுத்துக் கொள்வதால், நம்மிடமிருந்து இன்னொருவருக்கு அந்த நோய் பரவக்கூடிய வாய்ப்பு குறைகிறது. இது, கொரோனாவில் புதிய உருமாற்றங்கள் உருவாவதை தடுக்கிறது.

பல ஊசிகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கின்றன. எது நல்ல ஊசி என்று பார்த்து, பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அந்தந்த காலகட்டத்தில், அந்தந்த பகுதிகளில் கிடைக்கக் கூடிய தடுப்பூசியை போட்டுக் கொள்வது தான் புத்திசாலித்தனம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.காரணம், எந்த அளவுக்கு அதிகமான நபர்கள் போட்டு கொள்கிறோமோ, அந்த அளவுக்கு, சீக்கிரமாக கொரோனாவை இந்த உலகத்தை விட்டே விரட்டி விடலாம்.

'தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் முக கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும்; பிறகு எதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்?' என்று சிலர் கேட்கின்றனர்.ஒரு கூட்டத்தில், 100 பேர் இருக்கின்றனர் என்றால், அந்த, 100 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றால், அந்த இடத்தில் முக கவசம் தேவையில்லை என்கிறது உலக சுகாதார நிறுவனம். மற்றபடி, குறைந்தபட்சம், 80 சதவீதம் பேராவது தடுப்பூசி போடும் வரை, கண்டிப்பாக நாம் முகக் கவசம் அணிந்து தான் செல்ல வேண்டும்.

எத்தனை நாட்கள் வரை இந்த தடுப்பூசியின் பலன் இருக்கும் என்று தெரியாது. இதுவரை உள்ள தரவுகளின்படி, ஒரு ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் வரை, இந்த தடுப்பூசியின் பலன் கிடைக்கும் என்கிறது புள்ளி விபரம்.இந்த தடுப்பூசியால் ஏதாவது பக்க விளைவுகள், பல ஆண்டுகள் கழித்து உண்டானால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுகிறது.இந்த தடுப்பூசியின் அதிகபட்ச வேலைக்காலம், ஒரு ஆண்டு முதல், ஒன்றரை ஆண்டுகள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை முறையில், முதல்கட்ட தடுப்பூசி போட்டு, ஒரு ஆண்டு கடந்து விட்டோம்; எவ்விதமான பக்க விளைவுகளும் இதுவரை ஏற்படவில்லை.அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள், 'தடுப்பூசி போடாதவருக்கு, கொரோனா வந்தால், அரசு பொறுப்பேற்காது; வைத்தியமும் இலவசம் கிடையாது' என்று அறிவித்துள்ளன. இதனால், அங்கு மக்கள் ஆர்வத்துடன் ஊசி போட்டுக் கொள்கின்றனர்.

ஆனால், நாம் இங்கு கெஞ்சி கேட்டுக் கொள்வதால் தான், மக்கள் ஊசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு, இரண்டு வயதிற்குள், 17ல் இருந்து, 20 தடுப்பூசிகள் வரை போடப்படுகிறது; குழந்தைகள் சமர்த்தாக போட்டுக் கொள்கின்றன. ஆனால், மக்கள் தான், இந்த ஒரு தடுப்பூசியை போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.


இடது கை தோள்பட்டை


இங்கிலாந்தில் இரண்டாவது அலை அடித்துக் கொண்டிருப்பதால், எல்லாரும் தடுப்பூசிகள் போடுவதற்கு மருத்துவமனைகளில் திரண்டு நிற்கின்றனர். ஆனால், இரண்டாவது டோஸ் போடுவதற்கு மருந்து இல்லை என்று சொல்லி வருகிறது, அந்நாட்டு அரசு.ஆனால், நம் நாட்டில் அப்படியில்லை. 'மருந்து இல்லை' என்ற வார்த்தையே வரக்கூடாது என்ற எண்ணத்துடன், மத்திய அரசு, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது; இதற்காக, நாம் பெருமைப்பட வேண்டும்.

ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு சென்றால், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் பதிவு செய்து, உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தும் அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அனைவருக்கும் ரத்த அழுத்தம், காய்ச்சல் சோதனை நடத்தப்படுகிறது. பின், 0.5 மி.லி., அளவு இடது கை தோள்பட்டை தசையில் செலுத்தப்படுகிறது. செலுத்தப்பட்ட அரை மணி நேரம் கழித்து வீட்டிற்கு செல்லலாம்; வழக்கமான பணிகளில் ஈடுபடலாம்.இரண்டாவது தவணை ஊசி, ஒரு மாதம் கழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஊசி போட்டுக் கொண்ட சான்றிதழ் உள்ளிட்ட விபரங்கள், உங்கள் மொபைல் போனுக்கு வந்துவிடும்.


அடி மனதில் ஒரு பயம்


இனி வரும் நாட்களில், எங்கு செல்ல வேண்டும் என்றாலும் இந்த தடுப்பூசி சர்டிபிகேட், ஒரு முக்கியமான சான்றாக தேவைப்படும்; அதனால் கட்டாயம் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும்.ஒரு மருத்துவரான நான், தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன், நோயாளிகளை பார்க்கும் போது, அடி மனதில் ஒரு பயம் இருந்தபடியே இருக்கும். அதிலும் சிலர் கொரோனா அறிகுறிகளோடு வந்தால், அந்த பயம் பதற்றமாகி, 'நமக்கு கொரோனா வந்து விடுமோ?' என்ற எண்ணமும் இருந்து கொண்டே இருக்கும்.

தடுப்பூசி போட்ட பிறகு பெரிய நிம்மதி; என்னைச் சுற்றி ஒரு அக்னி வளையம் இருப்பதைப் போன்ற தைரியம் வந்து விட்டது. இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும், குறைந்தது, 10 பேருக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை எடுத்துக் கூறுவோம்; நம்மையும் காத்து, நம் நாட்டையும் காப்போம்!

தொடர்புக்கு: டாக்டர் ஜெயஸ்ரீ சர்மா
இ -மெயில்: doctorjsharma@gmail.com

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X