புதுடில்லி : அரசு நிலத்தை சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்த வழக்கில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா மீதான விசாரணையை நிறுத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
குற்றச்சாட்டுகர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகரான பெங்களூருவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக, கர்நாடகா தொழில் மேம்பாட்டு வாரியம், 2006ல் நிலங்களை கையகப்படுத்தியது.கடந்த, 2008 - 11 காலகட்டத்தில், கர்நாடகா முதல்வராக பதவி வகித்த போது, இதில், 24 ஏக்கர் நிலத்தை, சில தனி நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக, எடியூரப்பா விடுவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த விவகாரத்தில், முதல்வர் எடியூரப்பா உட்பட, ஒன்பது பேர் மீது, லோக் ஆயுக்தா போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால், எடியூரப்பா உட்பட, ஒன்பது பேர் மீதான வழக்கை, லோக் ஆயுக்தா நீதிமன்றம், 2016ல் கைவிட்டது.இது தொடர்பாக, ஆலம் பாஷா என்பவர், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த, 2012ல் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், வழக்கு விசாரணையை தொடர, சிறப்பு நீதிமன்றத்துக்கு சமீபத்தில் உத்தரவிட்டது.
மனு தாக்கல் : இந்த உத்தரவை எதிர்த்து, எடியூரப்பா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைத்து நேற்று உத்தரவு பிறப்பித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE