திருப்பூர்:துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை மற்றும் போலீசாருடன் எடுத்துச்செல்லப்ப ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த ஒட்டுச்சாவடிகளில் ஒப்படைக்கப்பட்டன. திருப்பூர் வடக்கு தொகுதியில், 535 ஓட்டுச்சாவடிகள், 40 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. 'கன்ட்ரோல் யூனிட்' மற்றும் 'பேலட் யூனிட்', 642 செட்'டும், 696 'விவி பேட்' கருவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடக்கு தொகுதியில், 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.இன்று காலை, 7:00 முதல், இரவு 7:00 வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. முன்னதாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், ஓட்டுச்சாவடி பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.ஜெய்வாபாய் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக, 'ஸ்ட்ராங் ரூம்', வேட்பாளர் பிரதிநிதிகள், தேர்தல் பார்வையாளர் உமானந்தா டோலி முன்னிலையில் திறக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், மண்டல தேர்தல் அலுவலர்களிடம், ஓட்டுப்பதிவு இயந்திரங்களையும், இதர பொருட்களையும் அனுப்பி வைத்தார்.'மொபைல் பார்ட்டி' வாகனங்களில், துப்பாக்கி ஏந்திய போலீசார், துணை ராணுவப்படையினர் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்சென்றனர்.முன்னதாக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய ஓட்டுச்சாவடி குறித்த நியமன ஆணை வழங்கப்பட்டது. அவர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று காத்திருந்தனர். தேர்தல் பொருட்களை பெற்று சென்ற மண்டல அலுவலர்கள், பள்ளிகளில் காத்திருந்த ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் வசம் அவற்றை ஒப்படைத்தனர்.ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் தேர்தல் தளவாடங்களை பெற்ற, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மாலையிலேயே, ஓட்டுப்பதிவுக்கு தயார்படுத்தி வைத்திருந்தனர்.பூஜை நடத்தி அனுப்பி வைப்புதிருப்பூர் தெற்கு தொகுதியில் 401 ஓட்டுச் சாவடி அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர். இதனால், இரண்டு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. மங்கலம் ரோடு குமரன் கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் நேற்று ஓட்டுச்சாவடிகளுக்கு, மண்டல அலுவலர்கள் மூலம் கொண்டு செல்லும் பணி துவங்கியது.வாகனங்களுக்கு தேங்காய், பழம் வைத்து, பூஜை செய்யப்பட்டது. வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்கள் கொண்டனர். அதன்பின் டயர்களுக்கு எலுமிச்சம் பழம் வைத்து, வாகனங்கள் புறப்பட்டு சென்றன.இப்பணியை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், தேர்தல் பார்வையாளர் மஷீர் ஆலம் ஆகியோர் பார்வையிட்டனர்.அவிநாசியில் தாமதம்அவிநாசி (தனி) சட்டசபை தொகுதியில், 401 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மகாராஜா கல்லுாரியில் இருப்பு வைக்கப்பட்டன. ஓட்டுச்சாவடிகளில் பணியாளர்களுக்கு தேவைப்படும் பொருட்கள், தண்ணீர் கேன் உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டன.நேற்று காலை, 7:00 மணிக்கு, போலீசார், மகாராஜா கல்லுாரிக்கு வரவழைக்கப்பட்டனர். ஆனால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிக்கு அனுப்பி வைக்கும் பணி பல்வேறு காரணங்களால், மதியம். 2:00 மணிக்கு மேல் தாமதமாக துவங்கியது.அவிநாசி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, ஓட்டுச்சாவடியில் பணிபுரிய உத்தரவு வழங்கப்பட்டது. இப்பணியை, கலெக்டர் விஜயகார்த்திகேயன் பார்வையிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE