திருப்பூர்:கடந்த ஒரு வாரமாக சூறாவளிக்காற்று வீசியதால், முறிந்து விழுந்த நேந்திரன் வாழைத்தார், அடிமாட்டு விலைக்கு விற்கப்படுவதாக, வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, செட்டிபாளையம் பகுதியில், நேந்திரன், செவ்வாழை, கதளி வாழைப்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. வாழை பயிரிடும் விவசாயிகளிடம், மொத்தமாக விலை பேசி, வியாபாரிகள் அறுவடை செய்கின்றனர்.கேரளாவை சேர்ந்த சில்லறை வியாபாரிகள் மற்றும் 'சிப்ஸ்' உற்பத்தியாளருக்கு விற்பனை செய்கின்றனர். ஒரு வாரமாக, மாலை நேரத்தில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருப்பதால், வேளாண் பயிர் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. பலமான காற்று வீசியதால், வாழைமரங்கள் முறிந்து விழுந்து சேதமாகியுள்ளன.செட்டிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நேந்திரன் வாழை மரங்களில் இருந்து, பழத்தார் முறிந்து விழுந்துள்ளது. உயரமாக வளரும் நேந்திரன் வாழை முறிந்து விழுந்ததால், மொத்தமாக விலைக்கு வாங்கிய வியாபாரிகள் கவலை அடைந்தனர்.கேரளாவில் இருந்து, பழவியாபாரிகளை வரவழைத்து, அடிமாட்டு விலைக்கு பழத்தார்களை அனுப்பி வைத்தனர்.விவசாயிகள் கூறியதாவது:நேந்திரன், செவ்வாழை பழத்தார்கள், கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. குறிப்பாக, நேந்திரன் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்கிறோம். வழக்கமாக, ஒரு தார் நேந்திரன் பழம், 450 ரூபாய்க்கு விற்கப்படும்.ஆனால், சேதமான வாழைத்தார் என்பதால், 100 முதல், 150 ரூபாய்க்கு மட்டுமே வாங்கி செல்கின்றனர். முறிந்துவிட்டதால், வேறு வழியில்லாமல் அனுப்பி வைக்கிறோம். மீதியுள்ள மரங்களிலும் அறுவடை செய்து, விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE