திருப்பூர்:திருப்பூர், முதலிபாளையத்தில் உள்ள அடல் இன்குபேஷன் மையம், ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்காக, 'டிஜிட்டல் சாம்பிளிங்' என்கிற புதிய நுட்பத்தை உருவாக்கியுள்ளது.மென்பொருள் உதவியுடன், வர்த்தகர் குறிப்பிடும் டிசைன்களில், அச்சு அசல், உண்மையான ஆடைக்கு நிகரான அனைத்து அம்சங்களுடன், 'டிஜிட்டல் சாம்பிள்' ஆடைகள் உருவாக்கப்படுகின்றன.இவை, டிஜிட்டல் பொம்மைகளுக்கு அணிவிக்கப்பட்டு, முப்பரிமாண தோற்றங்களில் போட்டோ, வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு, வர்த்தகருக்கு அனுப்பப்படுகிறது.அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி கூறியதாவது:'டிஜிட்டல் சாம்பிள்' ஆடைகள், டிஜிட்டல் பொம்மைகளுக்கு அணிவிக்கப்படுகிறது; வர்த்தகர்கள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில், ஆடையின் அளவு, நிறம் உட்பட அனைத்து அம்சங்களும், குறிப்பிடப்படுகின்றன.இப்புதுமையான தொழில்நுட்பத்தால், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, சாம்பிள் ஆடை தயாரிப்பில் ஏற்பட்டுவரும் செலவினங்கள் வெகுவாக குறையும்; நேரமும் மிச்சமாகும்.டிஜிட்டல் சாம்பிள் ஆடைகளை, எளிதாக வர்த்தகருக்கு அனுப்பி, பின்னுாட்டங்களை பெறலாம்; குறைகள் இருப்பின், உடனடியாக திருத்தம் செய்துவிடலாம். இதன் மூலம், வர்த்தகரிடமிருந்து மொத்த ஆடை தயாரிப்பு ஆர்டரையும் விரைந்து கைப்பற்றமுடியும்.கொரோனா பரவல் உள்ள இக்காலத்தில், ஆடைகளை தயாரித்து அனுப்புவதை, பெரும்பாலான வர்த்தகர்கள் விரும்புவதில்லை; வைரஸ் தொற்று தடுப்புக்கும், 'டிஜிட்டல் சாம்பிள்' ஆடைகள் தயாரிப்பு நுட்பம் சிறந்த மாற்றாக திகழ்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE