அவிநாசி:ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஜனநாயக கடமையில் தங்கள் பங்களிப்பை காட்ட துவங்கியுள்ளனர். அவர்களது பாதுகாப்பு குறித்து, சமூக வலைதளங்களில் வரும் பதிவு, வைரலாகியுள்ளது. அந்த பதிவு இதோ...தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பெரும்பாலும் தங்களது சொந்த வாகனங்களில் தான் செல்வர். இன்று, தேர்தல் பணி முடிந்தவுடன் தங்களது இரு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனத்தையோ தாங்களே ஓட்டி வந்து, தங்கள் வீடு நோக்கி பயணம் செய்ய வேண்டாம்.அதற்கு காரணம், 5ம் தேதி காலை, தேர்தல் பணி சார்ந்து, பணி உத்தரவு பெற்று, அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு சென்று தேர்தல் பணியாற்ற சென்று விடுவர். புதிய இடம் என்பதால், இரவு, உறக்கம் வராமல் சிரமப்பட்டு இருப்போம். தேர்தல் நாளன்று, அதிகாலை, 4:00 மணிக்கு எழுந்து, மாதிரி வாக்கெடுப்புக்கு தயார் செய்து, அதைத் தொடர்ந்து, 11 மணி நேரம் இடைவிடாமல் வாக்கெடுப்பு நடத்தி, அவற்றை தயார் செய்து, மண்டல அலுவலரிடம் ஒப்படைக்கும் வரை, இடைவிடாது உழைத்திருப்போம். நமது உடலும், கண்களும் மிகவும் களைத்து போயிருக்கும்.அதன் பின் நாம் அவசர, அவசரமாக வீடு நோக்கி, வாகனத்தை நாமே ஓட்டிச் செல்லும் போது, எதிரில் வருபவர் ஒரு நொடி கண் அசந்தால் போதும், விபத்து நிகழ்ந்து, விபரீதம் நடந்து விடும்.இதை தவிர்க்க ஒரே வழி, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைத்த பின், குறைந்தபட்சம் நான்கு மணி நேரமாவது ஓட்டுச்சாவடியில் ஓய்வெடுத்த பின் வாகனங்களை ஓட்டலாம்.தேர்தல் பணி என்பது முக்கியமானதாக இருந்தாலும், இரவில், தேர்தல் கருவிகளை ஒப்படைத்த பின், நடுரோட்டில் விடப்படுவோம் என்பது தெரிந்தது தான். அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சென்றால், நிம்மதியாக உறங்கலாம் என்ற எண்ணமே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. ஒரு நொடி தடுமாற்றம் அல்லது உறக்கம் நமது வாழ்வையே சிதைத்துவிடும். 'ரியல் வாழ்வில் ரீவைண்ட் கிடையாது'.இவ்வாறு, அந்த பதிவு நீள்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE