பொள்ளாச்சி:'ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்,' என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றுபவர்கள், வாக்காளர்கள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தேர்தல் அலுவலர்கள், போலீஸ், ஓட்டுச்சாவடி முகவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன், முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள், ஓட்டுச்சாவடி முகவர்கள், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.வாக்காளர்கள் அனைவரும், ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், வரிசையில் கட்டம் போடப்பட்ட இடத்தில் நிற்க வேண்டும்.வாக்காளர்கள் அனைவரும் ஓட்டுச்சாவடிக்குள் நுழையும் முன், அங்குள்ள கிருமிநாசினி கொண்டு கைகைள சுத்தம் செய்ய வேண்டும். உடல் வெப்பநிலையை அறிய சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வாக்காளர்கள் தங்கள் ஓட்டுச்சாவடியில் கொடுக்கப்படும் ஒரு முறை உபயோகிக்க கூடிய கையுறையை வலது கையில் கட்டாயம் அணிய வேண்டும்.ஓட்டுச்சாவடியில் உள்ள முதல் அலுவலர் முன் வாக்காளர்கள் தங்கள் முகக்கவசத்தை விலக்கி அடையாள அட்டை பரிசோதிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஓட்டளித்து வெளியே வந்த பின், உபயோகிக்கப்பட்ட கையுறையை, அதற்கென ஒதுக்கப்பட்ட மருத்துவ கழிவுகளை சேகரிக்கும் வர்ணம் பூசப்பட்ட தொட்டியில் இட வேண்டும். அங்குள்ள கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.ஓட்டுச்சாவடியை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அதிக வெப்பநிலை, கொரோனா அறிகுறி மற்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், ஒதுக்கப்பட்ட கடைசி ஒரு மணி நேரத்தில் ஓட்டு போடலாம். இதனை அந்தந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பர். கொரோனா பாதித்தவர்கள், பாதுகாப்பு கவச உடையை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும். கடைசி ஒரு மணி நேரத்தில், பணியாளர்கள், போலீசார் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட முழுக்கவச உடையை அணிந்திருக்க வேண்டும். உபயோகித்த முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு கவச உடைகளை மாற்று இடத்தில் போடக்கூடாது.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE