உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கப்பட்டது.உடுமலை தொகுதியில், 380 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர், 1,2,3 என, 1,824 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கீடு செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டு, உடனடியாக சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதே போல், மடத்துக்குளம் தொகுதியில், 357 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 1,712 பேர் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, கணியூர் ரோட்டிலுள்ள மண்டபத்தில் இறுதி கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு, ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கீடு செய்து உத்தரவுகள் வழங்கப்பட்டன. அவசர பணிக்காக, 20 சதவீதம் அலுவலர்கள் 'ரிசர்வ்' பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.அதே போல், துணை ராணுவ படை, தெலுங்கானா போலீசார், உள்ளூர் போலீசார், ஊர்க்காவல் படையில் பாதுகாப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அவர்கள் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பொருட்கள் வினியோகம் செய்யப்படும் வாகனங்கள் வாயிலாக, சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும், ஓட்டுச்சாவடிகள், சானிடைசர், கையுறை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள், முதியோர் வந்தால் சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து வருதல் உள்ளிட்ட பணிகளுக்கு, கல்லுாரி மாணவர்கள், உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களும் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஓட்டுச்சாவடிகளில், தனி மனித இடைவெளியை பராமரிக்க வட்டம் உள்ளிட்ட பாதுகாப்பு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டுச்சாவடிகளில், வாக்காளர்கள் வரிசையில் நின்று, ஓட்டுப்பதிவு செய்யும் வகையிலும், தனி மனித இடைவெளியை பராமரிக்கும் வகையில், சுகாதார பணியாளர்கள் வாயிலாக, குறிப்பிட்ட இடைவெளியில் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், நின்று ஒவ்வொருவராக ஓட்டுச்சாவடிக்குள் செல்ல வேண்டும்.மேலும், ஓட்டுச்சாவடிகளில் கொரோனா பாதுகாப்புக்காக, 'கொரோனா கிட்' தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE