பொள்ளாச்சி:'பி.ஏ.பி., ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் நிறைவேற்ற முழு முயற்சி மேற்கொள்வேன்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர், துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறுதியளித்துள்ளார்.
பொள்ளாச்சி அ.தி.மு.க., வேட்பாளர், துணை சபாநாயகர் ஜெயராமன், தொகுதி முழுவதும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார். புது பஸ் ஸ்டாண்டில் இறுதி கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.பிரசாரத்தில் அவர் பேசியதாவது:பொள்ளாச்சியில், நகர வளர்ச்சிக்காக ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பாலக்காடு ரோட்டில் மேம்பாலம், புறவழிச்சாலைகள் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
இதுபோன்று, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு விரிவாக்கத்துக்காக இடம் பெற்று கொடுத்து, கட்டடம் கட்ட நிதி பெற்று கொடுத்துள்ளேன். ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் பயன்பெறும் வகையில், நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக்கல்லுாரி கொண்டு வரப்பட்டுள்ளது.பி.ஏ.பி., திட்டம் புதுப்பிக்கவும், நிலுவையில் உள்ள ஆனைமலையாறு - நல்லாறு அணைத்திட்டம் செயல்படுத்தவும் இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடந்துள்ளது. தொடர்ந்து, இருமாநிலங்களிலும் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைத்து பேச்சு நடத்தப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, முதல்வர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்ததும், இத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்க முழு முயற்சிகள் மேற்கொள்வேன். மாவட்டம் அறிவிப்பு பரிசீலனையில் உள்ளதாக, தேர்தல் பிரசாரத்தில் முதல்வரும் அறிவித்துள்ளார்.பொள்ளாச்சியில் புதிய மருத்துவ கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, நர்சிங் கல்லுாரி, பாலிடெக்னிக் கல்லுாரிகள் கொண்டு வரப்படும். தொகுதி முழுவதும் மழைநீரை கொண்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
அனைத்து கிராமங்களிலும் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கித்தரப்படும். பொள்ளாச்சியில் பண்பாட்டை பறை சாற்றும் வகையில், கொங்கு பண்பாட்டு மையம் மற்றும் நுாலகம் துவங்கப்படும். பொள்ளாச்சி நகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.இன்னும் பல திட்டங்கள் செயல்படுத்த, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். மக்களோடு மக்களாக இருந்து கடந்த, 20 ஆண்டுகளாக பணியாற்றுகிறேன். இன்னும் பல திட்டங்கள் கொண்டு வர பாடுபடுவேன். பொள்ளாச்சியின் வளர்ச்சியே எனது உயிர்மூச்சாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE