பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட ஐந்து சட்டசபை தொகுதிகளில், தேர்தல் எனும் தேர்வு எழுதிய வேட்பாளர்களுக்கு, மதிப்பெண் வழங்க, வாக்காளர்கள் ஓட்டளிக்கும் தேர்தல் திருவிழா இன்று நடக்கிறது.பொள்ளாச்சியில், எட்டு வேட்பாளர்கள்; கிணத்துக்கடவில், 14; வால்பாறை, 6; உடுமலை, 15; மடத்துக்குளம், 15, என, மொத்தம், 58 பேர் களத்தில் உள்ளனர்.பொள்ளாச்சி தொகுதியில், கடந்த தேர்தல்களை விட இந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே நிலவும் கடும் போட்டியால், மோதல் போக்கு உருவாகியுள்ளது. வாக்குறுதிகளை அள்ளி வீசி, இரண்டு கட்சிகளும் ஓட்டு வேட்டை நடத்தியதுடன், ஓட்டுக்கு பணமும் கொடுத்து கவனிப்பு செய்துள்ளனர்.கிணத்துக்கடவு தொகுதியில் அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறை தோற்றதால் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் தி.மு.க.,வும்; தொகுதியை தக்க வைத்துக்கொள்ள அ.தி.மு.க.,வும் முனைப்பு காட்டி வருகிறது.உடுமலையில், அ.தி.மு.க., - காங்., போட்டியிடுகிறது. இரண்டு கட்சியினரும் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு சேகரித்துள்ளனர். மடத்துக்குளத்தில், மற்ற தொகுதிகளை போல் இல்லாமல், அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., என மும்முனை போட்டி நிலவுகிறது.வால்பாறையில், தொடர் வெற்றியை பெற அ.தி.மு.க.,வும், முன்னாள் எம்.எல்.ஏ., வாக தொகுதிக்கு வலம் வந்தவர் என்ற அடிப்படையில் இ.கம்யூ., வேட்பாளருக்கும் இடையே போட்டி நிலவுகிறது.அனைத்து கட்சியினரும் வாக்குறுதிகளை கூறி மக்களிடம் ஓட்டு சேகரித்தனர். அவர்களுக்கு, இன்று தேர்தல் என்னும் தேர்வு நடைபெறுகிறது. இதுவரை 'மவுன புரட்சி' நடத்திய மக்கள், இன்று வெற்றியை நிர்ணயிக்க தங்களது ஜனநாயக கடமை ஆற்ற தயாராக உள்ளனர்.பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட ஐந்து தொகுதிகளிலும் படித்த வாக்காளர்கள் அதிகம் உள்ள சூழலில், அனைவரும் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றி, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு ஏற்படுத்த வேண்டும் என, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.ஓட்டுக்கு பணம் வாங்காமல், நல்ல வேட்பாளரை தேர்ந்ெதடுக்க வேண்டும், மாநிலத்தில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள யார் முதல்வராக வேண்டும் என்பதை சிந்தித்து, ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.அடுத்த ஐந்தாண்டுகள் யார் ஆட்சி என்பதை தீர்மானிக்கும், தேர்தல் திருவிழாவில், அனைவரும் பங்கேற்று, ஓட்டளிக்க வேண்டும். அப்போது தான், ஜனநாயகம் மலரும்- நிருபர் குழு -.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE