மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் தாலுகா கொமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாகூர் ஆண்டவர் வீதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்தும், உறுதியிழந்தும் உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மழை பெய்ததோடு, பலத்த காற்றும் வீசியது. இதனால் இந்த தெருவில் இருந்த ஒரு மின்கம்பம் முறிந்து விழுந்தது. உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால், விபத்து எதுவும் ஏற்படவில்லை.அதிருப்தி அடைந்த பொதுமக்கள், உடுமலை கொழுமம் ரோடு கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில், சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: சேதமடைந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய கம்பங்கள் அமைக்க வேண்டும் என, இரண்டு மாதங்களுக்கு முன்பே மனு கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இந்த நிலையில் மின்கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்பட இருந்தது. இதைக்கண்டித்தும், இந்த தெருவில் இன்னும் சில மின்கம்பங்கள் இதுபோல் உறுதியிழந்தும் உள்ளன. உடனடியாக இதை அப்புறப்படுத்தி விட்டு புதியமின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சாலை மறியலில் ஈடுபட்டோம்.இவ்வாறு, தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் சமரசம் பேசி அவர்களை மறியலில் ஈடுபட விடாமல் தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE