நமது குழந்தைகளை வானுயர உயர்த்துவது கல்வி மட்டுமே என்பதை பெற்றோர் உணர்ந்து, வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது தலையாய கடமை.உடலுக்கு உறுதி தருவது உடற்பயிற்சி. கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும், உடற்பயிற்சிக்கு தேவையான ஒரு பூங்கா அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அப்படியிருக்க, மனதுக்கு பயிற்சி அளிக்க ஏன் ஒரு நூலகம் அமைக்கப்படவில்லை என்பது, புத்தக ஆர்வலர்களின் கேள்வி.உண்மையில் நுாலகம் என்பது, ஒரு சிறிய உலகமே. 'கூகுள்' மற்றும் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் மிகப் பெரிய அளவில் வாசிப்பு பழக்கம் அதிகரிக்கலாம்.
எனினும், நுாலகம் சென்று வாசித்தல் என்பது, ஒரு சிறந்த பயிற்சி. எனவே தான், வார்டுக்கு ஒரு நுாலகம் என்று அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்பதே வருத்தத்துக்குரியவிஷயம்.கோவையில், கவுலி பிரவுன் சாலையில் உள்ள மாவட்ட மத்திய நூலகம் உட்பட, 300 நுாலகங்கள் உள்ளன.
மற்றவற்றில், 102 கிளை நுாலகங்கள், நான்கு மொபைல் நுாலகங்கள், 118 கிராம நூலகங்கள் மற்றும், 75 பகுதிநேர நுாலகங்கள் உள்ளன. ஆனால், அவை முழு அளவில், செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கோவை ராமநாதபுரத்தில், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நூலகத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அங்கு தற்போது ஒரு ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கோவையின் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை நடந்ததால், நேரு ஸ்டேடியம் அருகில் அமைந்த நூலகம், நிரந்தரமாக மூடப்பட்டு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது. நுாலகங்களுக்கு இருப்பிடம் மிக முக்கியமானது; பொதுமக்கள் எளிதில் அணுக ஏதுவாக இருக்க வேண்டும் என்பது ஆர்வலர்களின் பொதுவான கருத்து.
கட்டடங்கள் 'ரெடி'
சமூக ஆர்வலர் மனோஜ் கூறியதாவது:'கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் நுாலகங்கள் இருக்கும்' என்று, 2011ல் முன்னாள் மேயர் வேலுசாமி உறுதியளித்தார். ஆனால், அந்த வாக்குறுதி, 10 ஆண்டுகளாகியும் நிறைவேற்றப்படவில்லை. தனியார் நுாலகங்களில் புத்தகங்களின் விலையில், 10 சதவீதம் ஒரு வாரத்துக்கு வாசிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரு நாள் தாமதமானால், அது மேலும் 10 சதவீதம் உயர்கிறது. அதனால் தனியார் நுாலகங்களில் இருந்து புத்தகங்கள் எடுப்பதை மக்கள் விரும்புவதில்லை.கோவை மாநாட்சியில் துணை கமிஷனராக இருந்த சிவராசு, ரிசர்வ் சைட்களில் அத்துமீறலைத் தவிர்ப்பதற்காக, பல நிறுவன வளாகங்களை கட்டினார். அவற்றில் பல கட்டடங்கள் இப்போது காலியாக உள்ளன. வார்டுகளில் உள்ள மக்களின் நலனுக்காக, தலா ஒரு நூலகம் நிறுவலாம். புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதற்கு பலர் தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர் ஊக்குவிப்பு தேவை!
குழந்தைகள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய இலக்கிய ஆர்வலர் எஸ். சுந்தரராஜன் கூறுகையில், ''சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பதற்கான பொறுப்பு பெற்றோரின் கைகளில் உள்ளது.
குழந்தைகள் வாசிப்பதில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டுவிட்டால், பின், அதை எப்போதும் கைவிடமாட்டார்கள். 'கிண்டில்' மற்றும் ஆடியோ புத்தகங்கள் கூட பழைய வாசிப்பு பழக்கத்தை ஈடு கட்ட முடியாது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், புத்தகக் கடைகள் மற்றும் புத்தக கண்காட்சிகள் ஒரு விறுவிறுப்பான வணிகமாகத் தொடரவே செய்கின்றன,'' என்றார்.
வாசிப்பு ஆர்வம் குறையவில்லை!
கோவை நீதிமன்ற வளாகம் அருகில் புத்தக விற்பனையாளரான அப்துல் பாய் கூறுகையில், ''அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில், 'வார்டுக்கு ஒரு நூலகம்' என்ற வாக்குறுதி இருந்தால், அது மிகவும் பயனளிக்கும். புத்தக வாசிப்பால் மக்கள் எவ்வளவு அதிகமாக அறிவு பெற்றிருக்கிறார்களோ, அந்த அளவு சிறந்ததாக நாடு திகழும். நான் மொபைல் வண்டியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் தமிழ் நாவல்களை விற்பனை செய்து வருகிறேன். அதிநவீன வசதிகள் வந்தாலும், வாசிப்பு ஆர்வம் குறையவில்லை. என்னிடம் புத்தகங்கள் வாங்குவதற்கு, ஒரு நிலையான வாடிக்கையாளர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு மலிவு விலையில் கல்வி புத்தகங்களையும் விற்பனை செய்து வருகிறேன்,'' என்றார்
-நமது நிருபர்-.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE